இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை (பிசிசிஐ) நிர்வகிப்பதற்கான குழுவினரை நியமனம் செய்யும் விவகாரத்தில் உதவ, ஃபாலி எஸ்.நாரிமனுக்கு பதிலாக மூத்த வழக்குரைஞர் அனில் திவானை உச்ச நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை நியமித்தது.

முன்னதாக நியமிக்கப்பட்டிருந்த நாரிமன், கடந்த 2009-ஆம் ஆண்டு பிசிசிஐ தரப்பு வழக்குரைஞராக தான் ஆஜராகியுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் பங்கேற்க விரும்பவில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இதையடுத்து, தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் தலைமையிலான அமர்வு இந்த நடவடிக்கையை மேற்கொண்டது.

பிசிசிஐ மறுசீரமைப்புக்கான பரிந்துரைகளை வழங்க ஓய்வுபெற்ற நீதிபதி லோதா தலைமையிலான குழுவை அமைத்தது உச்ச நீதிமன்றம். அந்தக் குழு வழங்கிய பரிந்துரைகளை அமல்படுத்த மறுத்த விவகாரத்தில் பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்குர், செயலர் அஜய் ஷிர்கே ஆகியோரை பொறுப்பிலிருந்து நீக்கி உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

அதைத் தொடர்ந்து, பிசிசிஐ பணிகளை மேற்கொள்ள நிர்வாகக் குழுவினரை நியமிக்க முடிவு செய்த உச்ச நீதிமன்றம், அதற்கான உறுப்பினர்களை பரிந்துரை செய்ய வழக்குரைஞர்களான ஃபாலி எஸ்.நாரிமன், கோபால் சுப்ரமணியன் ஆகியோரை நியமித்திருந்தது.

இந்நிலையில், அதில் நாரிமனுக்கு பதிலாக, அனில் திவான் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே, இந்திய கிரிக்கெட்டின் தேசிய அணி தேர்வாளர்கள் பொறுப்பிலிருந்து ககன் கோடா, ஜதின் பரஞ்பே ஆகிய இருவரும் விலக உள்ளனர்.

மூத்த தேர்வாளர்கள் குழுவானது டெஸ்ட் வீரர்களுடன் கூடிய 3 உறுப்பினர்களைக் கொண்டதாக இருக்க வேண்டும் என்று லோதா குழு பரிந்துரைத்துள்ளது.

எனவே, ஒருநாள் போட்டி வீரர்களான கோடா, ஜதின் இருவரும் விலகுகின்றனர்.