1999ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணியில் அறிமுகமான கிறிஸ் கெய்ல், சர்வதேச அளவில் மிகச்சிறந்த அதிரடி வீரராக திகழ்ந்துவருகிறார். 2000ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான கெய்ல், 2014ம் ஆண்டுடன் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மட்டும் ஆடிவருகிறார். 

285 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள கிறிஸ் கெய்ல், 24 சதங்கள் அடித்து ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதமடித்த வெஸ்ட் இண்டீஸ் வீரராக திகழ்கிறார். தனது அதிரடியான பேட்டிங்கால் டி20 ஸ்பெலிஷ்ட்டாக வலம் வருகிறார். ஐபிஎல், பிபிஎல், கனடா பிரீமியர் லீக், ஆஃப்கானிஸ்தான் பிரீமியர் லீக் உள்ளிட்ட பல டி20 லீக் தொடர்களில் ஆடிவருகிறார். 

அதிரடிக்கு பெயர்போன கெய்ல், சிக்ஸர்கள் விளாசுவதில் வல்லவர். சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் நீண்டகாலமாக முதலிடத்தில் இருந்த ஷாகித் அஃப்ரிடியை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளார் கிறிஸ் கெய்ல். 476 சிக்ஸர்களை விளாசியிருந்த அஃப்ரிடியை பின்னுக்கு தள்ளிவிட்டார் கெய்ல்.

கிரிக்கெட்டில் பேட்டிங்கில் எட்டப்பட்டுள்ள மைல்கற்களில் டாப் 5 இடங்களில் கெய்லின் பெயரும் இருக்கும். அதிக சிக்ஸர்கள், டாப் ஸ்கோர் ஆகிய பட்டியல்களில் கெய்லின் பெயர் கண்டிப்பாக இருக்கும். ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதமும் அடித்துள்ளார் கெய்ல். 2015 உலக கோப்பையில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக இரட்டை சதம் விளாசிய கெய்ல் 215 ரன்களை குவித்தார். உலக கோப்பை தொடரில் இரட்டை சதமடித்த ஒரே வீரர் என்ற பெருமையை பெற்றவர் கெய்ல்.

இந்த ஆண்டு இங்கிலாந்தில் நடக்க உள்ள உலக கோப்பையுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் கெய்ல். கடந்த ஆண்டு ஜூலை மாதத்திற்கு பிறகு ஒருநாள் போட்டிகளில் ஆடாத கெய்ல், தற்போது இங்கிலாந்துக்கு எதிராக நடந்துவரும் ஒருநாள் தொடரில் அணியில் இடம்பெற்றுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் அபாரமாக பேட்டிங் ஆடி சதமடித்த கெய்ல், செம கம்பேக் கொடுத்தார். 

சர்வதேச அளவில் மிகச்சிறந்த அதிரடி பேட்ஸ்மேனான கெய்ல், அவருடன் யார் ஓபனிங் இறங்க வேண்டும் என்ற கேள்விக்கு, சேவாக் என்று பதிலளித்துள்ளார். கெய்ல் அதிரடி வீரர் என்றால், சேவாக் சற்றும் அவருக்கு சளைத்தவர் அல்ல. எதிரணி பவுலர்களை முதல் பந்திலிருந்தே தெறிக்கவிட்டவர் சேவாக் என்பது குறிப்பிடத்தக்கது. சேவாக்கும் ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடித்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.