இந்திய அணியின் இளம் அதிரடி வீரர் ரிஷப் பண்ட், ஒருநாள் போட்டிகளில் ஆட வேண்டியதன் அவசியத்தை காரணத்துடன் விளக்கியுள்ளார் முன்னாள் ஜாம்பவான் கவாஸ்கர். 

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் அறிமுகமாகி, அறிமுக தொடரிலேயே இங்கிலாந்து மண்ணில் சாதனை சதமடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் ரிஷப் பண்ட். இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அசத்திய ரிஷப் பண்ட், வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடர், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் ஆகியவற்றிலும் அபாரமாக ஆடினார். 

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய மண்ணில் சதமடித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையையும் படைத்தார். அவரது பயமற்ற துடிப்பான ஆட்டத்தின் விளைவாக, முன்னாள் வீரர்கள் பலரும் ரிஷப் பண்ட்டை ஒருநாள் அணியிலும் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். கவாஸ்கர், கங்குலி உள்ளிட்ட முன்னாள் ஜாம்பவான்கள் ரிஷப் பண்ட்டுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர். 

உலக கோப்பையில் தோனி விக்கெட் கீப்பராக செயல்படுவார் என்பதால், ரிஷப் பண்ட்டை வெறும் பேட்ஸ்மேனாக மட்டும் அணியில் சேர்க்க வேண்டும் என்ற வலியுறுத்தல்கள் வலுத்துவருகின்றன. ஏற்கனவே கங்குலி, அகார்கர் உள்ளிட்ட பல வீரர்கள் இதை வலியுறுத்தியுள்ளனர். 

இந்நிலையில், ரிஷப் பண்ட் ஒருநாள் போட்டிகளிலும் குறிப்பாக உலக கோப்பையிலும் ஆட வேண்டியதன் அவசியத்தை காரணத்துடன் விளக்கியுள்ளார் கவாஸ்கர். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கவாஸ்கர், ரிஷப் பண்ட் ஒருநாள் போட்டியில் ஆடுவதற்கு ஏற்ற வீரர். அதுமட்டுமல்லாமல் அவர் ஒரு இடது கை பேட்ஸ்மேன். இந்திய அணியின் மிடில் ஆர்டரில் இடது கை பேட்ஸ்மேன் ஒருவர் கூட இல்லை. ஷிகர் தவான் ஒருவர் மட்டுமே இந்திய அணியின் இடது கை பேட்ஸ்மேன், அவரும் டாப் ஆர்டர். மிடில் ஆர்டரில் ஒரு இடது கை பேட்ஸ்மேன் இருப்பது நல்லது. 4, 5 அல்லது 6ம் வரிசையில் ஒரு இடது கை பேட்ஸ்மேன் இருக்க வேண்டும். எதிரணியில் அதிகமான இடது கை பவுலர்கள் இருக்கும்பட்சத்தில், நமது அணியில் குறைந்தது இரண்டு இடது கை பேட்ஸ்மேன்களாவது இருக்க வேண்டும். அந்த வகையில் தேர்வுக்குழு ரிஷப் பண்ட்டை ஒருநாள் அணியில் சேர்ப்பது குறித்து சிந்துத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கவாஸ்கர் வலியுறுத்தியுள்ளார்.