உலக கோப்பை நெருங்கிவிட்ட நிலையில், உலக கோப்பைக்கான இந்திய அணி ஓரளவிற்கு உறுதி செய்யப்பட்டுவிட்டது.

ரிசர்வ் தொடக்க வீரர் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஆகிய இரண்டு இடங்களுக்கான தேவையே இருந்தது. அதிலும் ரிசர்வ் தொடக்க வீரர் தான் கேஎல் ராகுல் தான் என்பதை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் அணியில் எடுத்து உறுதி செய்துவிட்டது. 

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய சுற்றுப்பயணங்களில் ஒருநாள் தொடரில் புறக்கணிக்கப்பட்ட ரிஷப் பண்ட்டும், இந்த தொடரில் அணியில் எடுக்கப்பட்டுள்ளார். ஆனால் தினேஷ் கார்த்திக் அணியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். 

உலக கோப்பைக்கு முந்தைய கடைசி தொடர் ஆஸ்திரேலிய தொடர் என்பதால், இந்த தொடருக்கான அணி கிட்டத்தட்ட உலக கோப்பைக்கான அணியாகவே பார்க்கப்படுகிறது. அப்படியிருக்கையில், தினேஷ் கார்த்திக் புறக்கணிக்கப்பட்டது அவரது மிகப்பெரிய ஏமாற்றம்தான். 

கேஎல் ராகுல், விஜய் சங்கர், ரிஷப் பண்ட் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட்ட நிலையில் தினேஷ் கார்த்திக் புறக்கணிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், தினேஷ் கார்த்திக் குறித்து கருத்து தெரிவித்துள்ள கவாஸ்கர், ரோஹித் சர்மா, தவான், விராட் கோலி, ராயுடு, தோனி, கேதர், ஹர்திக், புவனேஷ்வர், பும்ரா, ஷமி, குல்தீப், சாஹல் ஆகிய 12 வீரர்களும் உறுதி செய்யப்பட்டவர்கள். இவர்கள் தவிர விஜய் சங்கர் உலக கோப்பை அணியில் எடுக்கப்படலாம். தினேஷ் கார்த்திக் கண்டிப்பாக உலக கோப்பை அணியில் இடம்பெற வேண்டும். ரிஷப் பண்ட், ரஹானே, ராகுல் ஆகியோரை விட தினேஷ் கார்த்திக் சிறந்த மாற்று தொடக்க வீரருக்கான ஆப்சன். அவர் டெஸ்ட் போட்டிகளில் ஆடிய அனுபவம் பெற்றவர் என்பதால் ஒருநாள் போட்டியிலும் அவரால் தொடக்க வீரராக ஜொலிக்க முடியும் என தினேஷ் கார்த்திக்கிற்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். 

இதற்கு முன்னர் ஏற்கனவே ஒருமுறை தினேஷ் கார்த்திக்கை மாற்று தொடக்க வீரராக முயற்சிக்கலாம் என்று கவாஸ்கர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது மீண்டும் தினேஷ் கார்த்திக்கிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.