ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் ஆடிக்கொண்டிருந்தபோது மழை குறுக்கிட்டதால் போட்டி 17 ஓவர்களாக குறைக்கப்பட்டது. ஆஸ்திரேலிய அணி 17 ஓவர் முடிவில் 158 ரன்களை குவித்தது. டக்வொர்த் முறைப்படி இந்திய அணிக்கு 174 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 

174 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் ரோஹித் சர்மா, ராகுல், கோலி ஆகிய மூவரும் சொற்ப ரன்களில் வெளியேறி ஏமாற்றமளித்தனர். தவான் மட்டும் அதிரடியாக ஆடி 42 பந்துகளில் 76 ரன்களை குவித்தார். கடைசி நேரத்தில் ரிஷப் பண்ட் - தினேஷ் கார்த்திக் ஜோடி அதிரடியாக ஆடியும் கடைசி ஓவர்களில் விக்கெட்டுகளை பறிகொடுத்ததால் இலக்கை எட்டமுடியாமல் போனது. 

இந்த போட்டியில் சேஸிங் மாஸ்டர் கோலி, அவர் வழக்கமாக களமிறங்கும் மூன்றாவது வரிசையில் ராகுலை களமிறக்கிவிட்டது அனைவருக்குமே வியப்பாகத்தான் இருந்தது. ஏனெனில் மூன்றாவது வரிசையில் மிகச்சிறந்த வீரர் கோலி. அதுவும் ஆஸ்திரேலிய தொடரின் முதல் போட்டியில் வெற்றியுடன் தொடங்க வேண்டிய போட்டியில் இலக்கை விரட்டுவதில் வல்லவரான கோலி, மூன்றாமிடத்தில் அவரே இறங்கியிருக்கலாம். ஆனால் ராகுல் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் என்பதால் அவரை பின் வரிசையில் இறக்குவதை காட்டிலும் முன்வரிசையில் இறக்குவது நன்றாக இருக்கும் எனக்கருதி தனது இடத்தை ராகுலுக்கு வழங்கி அனுப்பிவைத்தார் கோலி. 

ஆனால் கோலியின் எண்ணத்தை தகர்த்துவிட்டார் ராகுல். 12 பந்துகளை எதிர்கொண்டு 13 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார் ராகுல். ராகுல் வெளியேறியபோது இந்திய அணி 9வது ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து 81 ரன்கள் எடுத்திருந்தது. இதனால் விராட் கோலியின் மீது அழுத்தம் அதிகரித்தது. அவரும் 8 பந்துகளை எதிர்கொண்டு வெறும் 4 ரன்னில் வெளியேறினார். விராட் கோலி மூன்றாமிடத்தில் இறங்கியிருந்தால் போட்டியை வேறு மாதிரி எடுத்து சென்றிருப்பார் என்பதில் சந்தேகமில்லை. 

இதுகுறித்து பேசிய இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர், கோலி நான்காம் வரிசையில் இறங்குவார் என்று எதிர்பார்க்கவில்லை. ஆஸ்திரேலிய தொடரின் முதல் போட்டியில் கோலி வழக்கமாக எந்த வரிசையில் பேட்டிங் செய்வாரோ அந்த வரிசையில்தான் இறங்கியிருக்க வேண்டும். ராகுலை மூன்றாமிடத்தில் இறக்கியிருக்கக்கூடாது என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.