ஐபிஎல் 12வது சீசன் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடக்க உள்ளது. அதற்கான வீரர்கள் ஏலம்  நேற்று ஜெய்ப்பூரில் நடந்தது. இந்த ஏலத்தில் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனாத்கத் ஆகிய இருவரும் அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டனர். 

வருண் சக்கரவர்த்தியை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ரூ.8.4 கோடிக்கும் ஜெய்தேவ் உனாத்கத்தை அதே 8.4 கோடி ரூபாய்க்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் ஏலத்தில் எடுத்தன. இவர்கள் தவிர இங்கிலாந்து ஆல்ரவுண்டர் சாம் கரன், தென்னாப்பிரிக்காவின் கோலின் இங்க்ராம், முகமது ஷமி ஆகிய வீரர்கள் நல்ல விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டனர். 

மேலும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்களுக்கு நல்ல கிராக்கி இருந்தது. பிராத்வெயிட் 5 கோடி ரூபாய்க்கும், பூரான் மற்றும் ஹெட்மயர் ஆகிய இருவரும் தலா 4.2 கோடி ரூபாய்க்கும் ஏலத்தில் எடுக்கப்பட்டனர். 

முன்னாள் ஜாம்பவான்கள் தற்போதைய ஐபிஎல்லில் ஆடியிருந்தால் யார் அதிக விலைக்கு ஏலம் போயிருப்பார்கள், யாருக்கு கிராக்கி அதிகமாக இருந்திருக்கும் என்பன போன்ற விவாதங்கள் நடப்பதுண்டும். வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்ஸ், இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் சிறந்த ஆல்ரவுண்டருமான கபில் தேவ் ஆகியோருக்கு அவரவரது ஆதரவாளர்கள் ஆதரவு தெரிவிப்பர். விவியன் தான் என்று சிலரும் கபில் தான் சிறந்தவர் என்று மற்ற சிலரும் தெரிவிப்பர். விவியன் ரிச்சர்ட்ஸ் பேட்ஸ்மேன் தான், ஆனால் நம்ம கபில் தேவோ அபாரமான ஆல்ரவுண்டர். 

கபில் தேவ் ஐபிஎல்லில் ஆடினால், ரூ.25 கோடிக்கு ஏலம் போயிருப்பார். ஜிம்பாப்வேவிற்கு எதிராக அவர் அடித்த 175 ரன்கள் தான் நான் என் வாழ்வில் பார்த்த சிறந்த இன்னிங்ஸ். அப்படியான ஒரு இன்னிங்ஸை இதுவரை பார்த்ததில்லை. ஒரு வீரராகவும் வர்ணனையாளராகவும் இதுவரை அப்படியொரு இன்னிங்ஸை நான் பார்க்கவில்லை. 17 ரன்களுக்கு இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்துவிட்ட நிலையில், 70 முதல் 80 ரன்களில் இன்னிங்ஸ் முடிந்துவிடும் என்று நினைத்தோம். அதன்பிறகு கபில் தேவ் ஆடிய விதமும் அவரது ஆட்டமும் அபாரம் என்று கவாஸ்கர் புகழ்ந்து தள்ளினார்.