ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தியாவின் வெற்றியை குறைத்து மதிப்பிட்டு கருத்து தெரிவிப்பவர்களுக்கு கவாஸ்கர் சவுக்கடி கொடுத்துள்ளார். 

ஆஸ்திரேலியாவில் முதன்முறையாக டெஸ்ட் தொடரை வென்று விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது. தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து என தொடர்ந்து வெளிநாடுகளில் தோல்வியை தழுவி வந்த இந்திய அணிக்கு, புதிய உத்வேகத்தை அளிக்கும் வகையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரின் வெற்றி அமைந்துள்ளது. 

இந்த தொடர் முழுவதுமே இந்திய அணி பேட்டிங் மற்றும் பவுலிங் ஆகிய இரண்டிலுமே ஆஸ்திரேலிய அணியின் மீது ஆதிக்கம் செலுத்தி ஆடியது. எப்போதும் மிகச்சிறந்த பேட்டிங் அணியாக மட்டுமே வெளிநாடுகளுக்கு செல்லும் இந்திய அணி, இந்த முறை மிகச்சிறந்த வலுவான பவுலிங் யூனிட்டுடன் ஆஸ்திரேலியாவுக்கு சென்றது. வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களை கொண்ட ஆஸ்திரேலியாவுக்கு மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களுடன் சென்றது இந்திய அணி.

இந்திய அணியின் பவுலிங்கை சமாளிக்க முடியாமல் திணறிய பேட்டிங் யூனிட் மற்றும் இந்திய பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்த முடியாத பவுலிங் யூனிட் என பேட்டிங் மற்றும் பவுலிங் ஆகிய இரண்டிலுமே பலவீனமாக இருக்கிறது ஆஸ்திரேலிய அணி. ஆனால் பலவீனத்தையும் தோல்வியையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையும் பெருந்தன்மையும் இல்லாத ஆஸ்திரேலிய அணியும் சரி, சில முன்னாள் வீரர்களும் சரி, நொண்டிச்சாக்கு சொல்லிவருகின்றனர். ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன், ஆடுகளங்கள் இந்தியாவுக்கு சாதகமாக அமைக்கப்பட்டிருந்ததாக தெரிவித்திருந்தார். அதேபோல, ஸ்மித் மற்றும் வார்னர் இல்லாமல் வலுவிழந்த ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி வீழ்த்திவிட்டதாக கூறி மனதை தேற்றிக்கொள்கின்றனர். 

ஆனால் இந்திய அணி உண்மையாகவே பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே நன்றாக ஆடியது. குறிப்பாக வேகப்பந்து வீச்சில் மிரட்டியது என்றுதான் கூறவேண்டும். அப்படியிருக்கையில், இப்படியான சாக்குப்போக்கு சொல்பவர்களுக்கு கவாஸ்கர் பதிலடி கொடுத்துள்ளார். 

இதுகுறித்து பேசிய கவாஸ்கர், ஸ்மித்தும் வார்னரும் ஆஸ்திரேலிய அணியில் ஆடாதது இந்திய அணியின் பிரச்னை கிடையாது. அவர்கள் இருவருக்கும் வேண்டுமானால் ஓராண்டை விட குறைந்த காலம் தடை விதித்திருக்கலாம். ஆனால் இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்கக்கூடாது என்பதற்கான எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அவர்களுக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அதற்கு இந்திய அணி பொறுப்பில்லை. இந்திய அணி தொடரை வென்றது மிகப்பெரிய சாதனை தான் என்று தடாலடியாக தெரிவித்தார்.