நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டிக்கு பிறகு இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங் மீதான நம்பிக்கை, அணி நிர்வாகத்திடமும் ரசிகர்களிடமும் அதிகரித்துள்ளது. 

இந்திய அணி, ரோஹித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி ஆகிய மூன்று டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களையே அதிகமாக சார்ந்துள்ளது. அவர்கள் சொதப்பும் போட்டிகளில் பெரும்பாலான சமயங்களில் மிடில் ஆர்டரும் சோபிக்க தவறிவிடுவதால் இந்திய அணி குறைந்த ஸ்கோரை அடித்து தோற்க நேரிடுகிறது. 

நியூசிலாந்துக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் அதுதான் நடந்தது. எப்போதும் டாப் ஆர்டர்களையே நம்பியிருக்க முடியாது. அவர்கள் சொதப்பும்பட்சத்தில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பொறுப்புடன் ஆடி, ஆட்டத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்ல வேண்டும். அதை செய்ய தவறியதால் இந்திய அணியின் மிடில் ஆர்டர் மீது விமர்சனங்களும் சந்தேகங்களும் எழுந்தன. 

ராயுடு, கேதர் ஜாதவ், தினேஷ் கார்த்திக் ஆகியோர் நான்காவது போட்டியில் சொதப்பினர். ஆனால் கடைசி போட்டியிலும் 18 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து, நான்காவது போட்டியில் எதிர்கொண்ட அதே நெருக்கடியை எதிர்கொண்டது இந்திய அணி. ஆனால் கடந்த முறை செய்த தவறை இந்த முறை செய்யவில்லை. ராயுடுவும் விஜய் சங்கரும் இணைந்து அவசரப்படாமல் நிதானமாக பார்ட்னர்ஷிப் அமைத்து பொறுப்புடன் ஆடி அணியை மீட்டெடுத்தனர். 

சர்வதேச ஒருநாள் போட்டியில் தனது முதல் ஒருநாள் இன்னிங்ஸை ஆடிய விஜய் சங்கர், ராயுடுவுக்கு ஒத்துழைப்பு கொடுத்து அவருடன் இணைந்து அபாரமாக ஆடி அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தார். அனுபவ வீரர் என்ற முறையிலும் உலக கோப்பைக்கான அணியில் தனது இடத்தை உறுதி செய்யும் வகையிலும் மிகவும் பொறுப்புடனும் பொறுமையாகவும் ஆடிய ராயுடு, களத்தில் நிலைத்த பிறகு அடித்து ஆடினார். அந்த நிதானம் தான் ரொம்ப முக்கியம். ஏனென்றால் நியூசிலாந்து பவுலர்கள் நன்றாக பந்துவீசி கொண்டிருக்கும்போது அடித்து ஆட முயல்வது சரியான செயல் அல்ல. அதிலும் 4 விக்கெட்டுகளை 18 ரன்களுக்கே இழந்துவிட்ட நிலையில், பார்ட்னர்ஷிப் தான் முக்கியம் என்பதை உணர்ந்து அதில் கவனம் செலுத்தி சிறப்பாக ஆடினர். 

ராயுடு அரைசதம் அடித்த பிறகு அதிரடியாக ஆடினார். எனினும் 90 ரன்களில் ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். விஜய் சங்கர் 45 ரன்கள், கேதர் ஜாதவ் 34 ரன்கள், ஹர்திக் பாண்டியா 45 ரன்கள் என இவர்களும் சிறப்பாக ஆடினர். இந்த இன்னிங்ஸின் மூலம் இந்திய அணியின் மிடில் ஆர்டர் மீதான சந்தேகத்திற்கும் கேள்விகளுக்கும் விடை கிடைத்துள்ளது. இந்திய அணியின் மிடில் ஆர்டர், எந்த சூழலிலும் போட்டியை எடுத்து செல்லக்கூடிய திறன் பெற்றதுதான் என்ற நம்பிக்கையை அளித்துள்ளது. உலக கோப்பை நெருங்கிய நிலையில், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் பொறுப்பான ஆட்டம் இந்திய அணிக்கு கூடுதல் தெம்பை அளித்துள்ளது. 

இந்நிலையில், இந்திய அணியின் மிடில் ஆர்டர் குறித்தும் ராயுடு குறித்தும் பேசிய கவாஸ்கர், ஹாமில்டன் ஒருநாள் போட்டிக்கு பிறகு இந்திய அணியின் மிடில் ஆர்டர் குறித்த கேள்விகள் எழுந்தன. கடைசி போட்டியிலும் மிகவும் இக்கட்டான நிலை உருவானபோது, அவசரப்படாமல் கடந்த போட்டியில் கற்ற பாடங்களின் விளைவாக நிதானமாக ஆடினார் ராயுடு. முதல் 20 பந்துகளில் வெறும் 1 ரன் மட்டுமே அடித்தார். அடுத்த 20 பந்துகளில் 11 ரன்கள் அடித்தார். நியூசிலாந்து பவுலர்கள் அபாரமாக வீசிக்கொண்டிருந்தபோது அவசரப்பட்டிருந்தால் எல்லாம் போயிருக்கும். ஆனால் இந்த முறை சிறப்பாக ஆடினார். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ராயுடு சதமடிக்கும் வாய்ப்பு கிடைத்தும் அவரால் அடிக்க முடியாமல் போனது வருத்தம்தான் என்று கவாஸ்கர் தெரிவித்தார்.