டெஸ்ட் போட்டிகளில் வீரர்கள் சரியாக ஆடாததற்கு ஐபிஎல் போட்டிகள் தான் காரணம் என இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் குற்றம்சாட்டியுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகள், டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்றுவிதமாக நடத்தப்படுகின்றன. இதில் டெஸ்ட் போட்டிதான் மிகச்சிறந்த போட்டி. டெஸ்ட் போட்டிகளில் ஆடும் வீரர்களுக்குத்தான் கூடுதல் மதிப்பு. ஏனென்றால் குறுகிய ஓவர்கள் கொண்ட போட்டிகளில் ஆடுவதை விட டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடும்போது கூடுதல் மனவலிமையும் பொறுமையும் நிதானமும் தேவை.

டெஸ்ட் கிரிக்கெட் தான் இன்றளவும் மிகச்சிறந்த கிரிக்கெட் போட்டியாக பார்க்கப்படுகிறது. ஆனால் டி20 போட்டிகள் வந்ததுமே டெஸ்ட் கிரிக்கெட் மீதான ஆர்வம் குறைந்துவிட்டதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. மேலும் சர்வதேச டி20 போட்டிகள் தவிர உள்நாட்டு டி20 பிரீமியர் லீக் தொடர்கள் நிறைய நடத்தப்படுகின்றன. இந்தியாவில் நடத்தப்படும் ஐபிஎல் தவிர பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் உள்ளிட்ட நாடுகளிலும் இதுபோன்ற பிரீமியர் லீக் போட்டிகள் நடத்தப்படுகின்றன. எனினும் அதிகமாக பணம் புழங்கும் தொடர் என்பது ஐபிஎல் தான்.

இதனால் வீரர்களுக்கு தங்கள் சொந்த நாட்டு அணியில் ஆட வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் இதுபோன்ற பிரீமியர் லீக் தொடர்களில் ஆடிவருகின்றனர். 

இந்நிலையில், இந்தியா இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 4-1 என இழந்தது. முதல் நான்கு போட்டிகளில் விராட் கோலியை தவிர வேறு எந்த இந்திய வீரரும் சரியாக பேட்டிங் ஆடவில்லை. ஆனால் கடைசி போட்டியின் கடைசி இன்னிங்ஸில் ராகுலும் ரிஷப் பண்ட்டும் அபார பேட்டிங்கை வெளிப்படுத்தினர். எனினும் இந்திய அணியின் பேட்டிங் பெரியளவில் சோபிக்கவில்லை என்பதால் 4-1 என டெஸ்ட் தொடரை இழந்தது. 

இந்த தொடரின் முதல் மற்றும் நான்காவது போட்டிகளில் வெற்றிக்கு அருகில் சென்று இந்திய அணி தோல்வியை தழுவியது. அதற்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் அணியை வெற்றியடைய செய்யும் அளவிற்கான பொறுமையும் மனவலிமையும் இல்லாததே காரணமாக அறியப்படுகிறது. இதுகுறித்து கோலி கூறும்போது கூட, ஒரு சீனியர் வீரராக அணியை வெற்றியை நோக்கி சென்றால் மட்டும் போதாது. அணியை வெற்றி பெற செய்ய வேண்டியதும் தனது கடமை என ஓபனாக தெரிவித்தார். 

இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியின் கடைசி நாள்(நேற்று) ஆட்டம் தொடங்குவதற்கு முன்பாக வர்ணனையாளர்கள் கலந்துரையாடலில் பேசிய சுனில் கவாஸ்கர், ஐபிஎல் போட்டிகளால் தான் வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் சரியாக ஆடுவதில்லை. இந்திய அணியில் இடம் கிடைக்காவிட்டாலும் ஐபிஎல்லில் ஆடிக்கொள்ளலாம் என்ற எண்ணம் இருப்பதும் அவர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் சரியாக ஆடாததை பற்றி கவலை கொள்ளாததற்கு காரணம். முன்பெல்லாம் இந்திய அணியில் ஆடாவிட்டால், ரஞ்சி டிராபியில் மட்டும்தான் ஆடமுடியும். ஆனால் இப்போது வாய்ப்புகள் ஐபிஎல் ரூபங்களில் விரிவடைந்தது தான் வீரர்களின் அலட்சியத்திற்கு காரணம் என கவாஸ்கர் குற்றம்சாட்டினார்.