இந்திய கிரிக்கெட்டில் எதிர்காலத்தில் கேஎல் ராகுல் தான் மிகச்சிறந்த வீரராக திகழ்வார் என்று முன்னாள் ஜாம்பவான் கவாஸ்கர் ஆருடம் தெரிவித்துள்ளார். 

இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான ராகுல், கடந்த ஐபிஎல் சீசனில் அபாரமாக ஆடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இதையடுத்து இந்திய அணியில் அவருக்கு நிரந்தர இடமும் கிடைத்தது. இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா ஆகிய தொடர்களில் இடம்பெற்றிருந்தார். ரோஹித், தவான், கோலி ஆகிய மூன்று இடங்களும் இந்திய அணியில் உறுதியாகிவிட்டதால், டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான ராகுலுக்கு ஆடும் லெவனில் இடம் கிடைப்பதில்லை. 

ஆனால் டெஸ்ட் அணியில் தொடக்க வீரராக களமிறங்கிவந்த ராகுல், இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா ஆகிய தொடர்களில் தொடர்ந்து சொதப்பிவந்தார். அவருக்கு அதிகமான வாய்ப்புகள் கொடுக்கப்பட்டும் பயன்படுத்தி கொள்ளவில்லை. இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸை தொடர்ந்து ஆஸ்திரேலியாவிலும் சொதப்பியதால் அந்த தொடரில் பாதியில் அணியிலிருந்து நீக்கப்பட்டார். எனினும் அவர் மீண்டும் அணியில் இடம் பிடிப்பது உறுதி என்பது தெரிந்த விஷயம்தான். 

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான ஒருநாள் அணியில் ராகுல் இடம்பெற்றிருந்தார். இதற்கிடையே தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஹர்திக் பாண்டியாவுடன் சேர்ந்து கலந்துகொண்டு பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில் சிக்கியதால், சஸ்பெண்ட் செய்யப்பட்டு, ஆஸ்திரேலியாவிலிருந்து நாடு திரும்பினார். அணியிலிருந்து சஸ்பெண்ட் செய்யபட்டதால், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆடவில்லை. ஐபிஎல்லில் ஆடுவாரா என்பதும் தெரியவில்லை. அதனால் உலக கோப்பை அணியில் இடம்பெறுவதும் சந்தேகமாகியுள்ளது. 

ராகுல் சரியாக ஆடாவிட்டாலும், ராகுலின் திறமையை அறிந்து அவரை ஏற்கனவே பாராட்டி பேசியுள்ளார் முன்னாள் ஜாம்பவான் கவாஸ்கர். ராகுல் உலக கோப்பை அணியில் இடம்பெற வேண்டும் என்றுகூட ஏற்கனவே கவாஸ்கரும் கங்குலியும் கருத்து தெரிவித்திருந்தனர். களத்திலும் சொதப்பி, களத்திற்கு வெளியேயும் சர்ச்சையில் சிக்கி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள ராகுலை, இப்போதும் பாராட்டி பேசியுள்ளார் கவாஸ்கர். இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலத்தின் மிகச்சிறந்த வீரராக ராகுல் வலம்வருவார் என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார். 

ராகுல் குறித்து பேசிய கவாஸ்கர், ராகுல் அண்மைக்காலமாக ரன்கள் அடிக்கவில்லை, தன்னம்பிக்கை இழந்து காணப்படுகிரார். எனினும் இப்போதும் சொல்கிறேன், இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலத்தின் மிகச்சிறந்த வீரராக ராகுல் வலம்வருவார். அதற்கான அனைத்து தகுதிகளும் திறமையும் அவரிடம் உள்ளது. தொடக்க வீரரான அவர், தொடக்கத்தில் அவர் செய்யும் தவறுகளை திருத்திக்கொள்ள வேண்டும். கால்நகர்த்தல்களில் சில திருத்தங்களை செய்துகொண்டு ஆட வேண்டும் என்று கவாஸ்கர் வலியுறுத்தியுள்ளார். 

அதாவது, கபில் தேவ், சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோரை போல எதிர்காலத்தில் ராகுலும் இந்திய கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தி ஒரு பெரிய ரவுண்டு வருவார் என்று கூறியுள்ளார்.