இந்திய கிரிக்கெட்டை அடுத்த பத்தாண்டுகளுக்கு பிரித்வி ஷா தான் ஆளப்போகிறார் என்று முன்னாள் ஜாம்பவான் கவாஸ்கர் ஆருடம் தெரிவித்துள்ளார். 

இளம் வீரர் பிரித்வி ஷா, தனது அபார திறமையான பேட்டிங்கால் கிரிக்கெட் உலகின் மொத்த கவனத்தையும் தன்பால் ஈர்த்துள்ளார். 18 வயதே ஆன பிரித்வி ஷா, வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடரில் அறிமுகமானார். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான முதல் டெஸ்டில் அறிமுகமான பிரித்வி ஷா, அறிமுக போட்டியிலேயே சதமடித்து அசத்தினார். இரண்டாவது டெஸ்டிலும் முதல் இன்னிங்ஸில் 70 ரன்கள் எடுத்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். 

சிறப்பாக ஆடி வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் தொடர் நாயகன் விருதையும் தட்டி சென்றார். பிரித்வி ஷாவின் ஆட்டத்திறன் அனைவரையும் கவர்ந்துள்ளது. அவரும் நேர்த்தியான பேட்டிங், கால் நகர்த்தல்கள், நிதானம் என அவரது பேட்டிங் திறன்கள் ஜாம்பவான்களை கவர்ந்திழுத்துள்ளது. குறிப்பாக பேக் ஃபூட் ஷாட்டுகளை நேர்த்தியாக ஆடுகிறார். 

பிரித்வி ஷாவை கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர், சேவாக், லாரா ஆகியோருடன் ஒப்பிடுகின்றனர். பிரித்வி, சச்சின் மற்றும் லாராவின் கலவை என சிலரும் சச்சின் மற்றும் சேவாக்கின் கலவை வேறு சிலரும் புகழ்ந்து தள்ளுகின்றனர். இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம் இவர்தான் என்று புகழப்படுகிறார்.

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடரில் சிறப்பாக ஆடிய அபார திறமைசாலியான பிரித்வி ஷா, கண்டிப்பாக ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இடம்பெறுவார். 

இந்நிலையில் பிரித்வி ஷா குறித்து பேசியுள்ள முன்னாள் ஜாம்பவான் கவாஸ்கர், பிரித்வி ஷா தான் அடுத்த 10 ஆண்டுகளுக்கு இந்திய கிரிக்கெட்டை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்லப்போகிற வீரர். ஆனால் ஆஸ்திரேலிய ஆடுகளங்களும் சூழலும் வேறு மாதிரியாக இருக்கும். பிரித்வி ஷா பேக்ஃபூட் ஷாட் நன்றாக ஆடுகிறார். ஆனால் ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் பந்து நன்றாக எழும்பும். அதுபோன்ற ஆடுகளங்கள் பிரித்வி ஷாவின் உத்திக்கு சவாலாக இருக்கும். அதனால் அங்கு பிரித்வி திணறக்கூடும் என்று கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்வி ஷா சதங்களை எதிர்நோக்கியே ஆடுகிறார். இவரை போன்ற சதங்களை விரும்பும் வீரர்கள் அணிக்கு அவசியம். இளம் வயதிலேயே போதிய அனுபவம் பெற்ற வீரராக பிரித்வி திகழ்கிறார் என்று கவாஸ்கர் பாராட்டியுள்ளார்.