தோனி உள்நாட்டு போட்டிகளில் ஆட வேண்டும் என்று அவருக்கு முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் அறிவுரை வழங்கியுள்ளார். 

இந்திய அணி கடந்த சில ஆண்டுகளாகவே தொடக்க வீரர்களை அதிகமாக சார்ந்துள்ளது. மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கான தேடுதல் வேட்டை தொடர்ந்த வண்ணம் உள்ளன. மிடில் ஆர்டரில் இன்னும் பிடிமானம் இல்லாததால் தோனி, மிடில் ஆர்டரில் சிறப்பான பங்களிப்பை செய்து போட்டியை அவரது ஸ்டைலில் வெற்றிகரமாக முடித்துவைக்க வேண்டிய தேவை உள்ளது. 

ஆனால் தோனி அண்மைக்காலமாகவே ஃபார்மில்லாமல் தவித்துவருகிறார். அதனால் விமர்சனங்களையும் எதிர்கொள்கிறார். தோனி விமர்சனங்களை எதிர்கொண்டாலும் அவற்றிற்கெல்லாம் தனது பேட்டிங்கின் மூலம் மீண்டும் பதிலடி கொடுத்துவிடுவார். உலக கோப்பைக்கு இன்னும் ஓராண்டு உள்ள நிலையில், தோனி மீண்டும் ஃபார்முக்கு வந்து சிறப்பாக ஆடி இந்திய அணிக்கும் ரசிகர்களுக்கும் நம்பிக்கையையும் உத்வேகத்தையும் அளிக்க வேண்டும்.

இந்நிலையில் தோனி குறித்து கருத்து தெரிவித்துள்ள கவாஸ்கர், தோனி கண்டிப்பாக உள்நாட்டு போட்டிகளில் ஆடவேண்டும். நான்கு நாட்கள் போட்டிகளிலும் ஆட வேண்டும். அவர் ஏற்கனவே ஜார்க்கண்ட் மாநில இளம் வீரர்களுக்கு நிறைய உதவிகளை செய்துகொண்டிருக்கிறார். ஜார்க்கண்ட் அணியின் ஆலோசகராக செயல்படும் தோனி அந்த அணியுடன் செல்வது, உத்வேகப்படுத்துவது என இயங்கிக்கொண்டிருக்கிறார். எனினும் அவர் அணியில் ஆடுவது மற்ற வீரர்களுக்கு உத்வேகமளிக்கும். இளம் வீரர்களுக்கு நல்ல படிப்பினையையும் அனுபவத்தையும் கொடுக்கும் என கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.