இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர், வரும் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர், கடந்த 2004ம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமானார். கடைசியாக 2013ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆடினார். அதன்பின்னர் இந்திய அணிக்காக ஆடவில்லை. 

36 வயதான கவுதம் காம்பீர், இந்திய அணிக்காக 58 டெஸ்ட் போட்டிகளிலும் 147 ஒருநாள் போட்டிகளிலும் 37 டி20 போட்டிகளிலும் ஆடியுள்ளார்.  2011 உலக கோப்பை இறுதி போட்டியில் சச்சின் மற்றும் சேவாக்கின் விக்கெட்டுகளை விரைவில் இந்திய அணி இழந்த சமயத்தில் இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்து அந்த போட்டியை வென்று கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக திகழ்ந்தவர் காம்பீர். அவரது அந்த இன்னிங்ஸ் யாராலும் எளிதில் மறந்துவிட முடியாதது. 

தற்போது இந்திய அணியில் ஆடாவிட்டாலும், ஐபிஎல் போட்டிகளில் ஆடிவருகிறார். இந்நிலையில், கவுதம் காம்பீர் பாஜகவில் இணைந்து அடுத்துவரும் டெல்லி சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவலை டைனிக் ஜகரான் பத்திரிகை வெளியிட்டுள்ளது. 

தற்போது டெல்லியில் அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடந்துவருகிறது. 2020ம் ஆண்டு தொடக்கத்தில் இந்த ஆட்சி முடிவுக்கு வர உள்ளது. இந்நிலையில், இதற்கிடையே பாஜகவில் இணைய உள்ள காம்பீர், 2020ல் நடக்கும் டெல்லி சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

பாஜக, அடுத்த  ஆண்டு வர உள்ள மக்களவை தேர்தலுக்கே, பிரபலங்களின் ஆதரவை திரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. ஏற்கனவே கங்குலி பாஜகவில் இணைய போவதாக தகவல்கள் வெளியாகியன. ஆனால் அத்தகவலை கங்குலி மறுத்தார். இந்நிலையில், தற்போது காம்பீர் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.