Gautam Gambhir receives education expenses for children who died in Naxal attack

சத்தீஸ்கரில் நக்ஸல் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த மத்திய ரிசர்வ் காவல் படையைச் சேர்ந்த வீரர்களின் குழந்தைகளுக்கான கல்விச் செலவை ஏற்பதாக இந்திய கிரிக்கெட் வீரர் கெளதம் கம்பீர் அறிவித்துள்ளார். இதற்கு வலைதளங்களில் அவருக்கு பாராட்டுகள் குவிகிறது.

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் உள்ள காலாபத்தர் பகுதியில் புதிதாக சாலை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.

நக்ஸல் பாதிப்பு மிகுந்த அப்பகுதியில் சாலைப் பணியில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு பாதுகாப்பாக 74-ஆவது படைப் பிரிவைச் சேர்ந்த 99 வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை நண்பகலில் நக்ஸல் தீவிரவாதிகள் நிகழ்த்திய திடீர் தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் 25 பேர் உயிரிழந்தனர்.

நக்ஸல் தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் கம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியினர், கடந்த புதன்கிழமை நடைபெற்ற ஆட்டத்தின்போது தங்களது கைகளில் கறுப்பு நிறப்பட்டை அணிந்திருந்தனர்.

பிறகு, உயிரிழந்த அந்த சிஆர்பிஎஃப் வீரர்களின் குழந்தைகளுக்கான கல்விச் செலவை தாம் ஏற்பதாக கிரிக்கெட் வீரர் கெளதம் கம்பீர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:

“சுக்மா மாவட்டத்தில் சமீபத்தில் நிகழ்ந்த நக்ஸல் தாக்குதலில் உயிரிழந்த வீரர்களின் குழந்தைகளுடைய கல்விச் செலவை கெளதம் கம்பீர் அறக்கட்டளை ஏற்கிறது.

ஒரு கிரிக்கெட் போட்டியில் தோற்பதும், நாட்டைப் பாதுகாப்பதற்கான போராட்டத்தின்போது அன்புக்குறிய ஒருவர் உயிரிழப்பதும் ஒன்றாகாது.

அந்த சம்பவத்தில் உயிரிழந்த 2 வீரர்களின் மகள்கள் கடும் துக்கத்தில் இருக்கும் படத்தை செய்தித்தாளில் பார்த்தபோது மிகவும் கவலையுற்றேன்” என்று கம்பீர் அதில் கூறியுள்ளார்.