விஜய் ஹசாரே தொடரில் கேரளாவிற்கு எதிராக அபாரமாக ஆடி சதமடித்த காம்பீர், மீண்டும் இந்திய அணியில் இடம்பெற வேண்டும் என ரசிகர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். 

கவுதம் காம்பீர் இந்திய அணியின் நட்சத்திர வீரராக வலம்வந்தவர். திறமையான மற்றும் அதிரடியான பேட்ஸ்மேனான காம்பீர், இந்திய அணிக்கு பல வெற்றிகளை குவித்து கொடுத்திருக்கிறார். குறிப்பாக 2011ம் ஆண்டு உலக கோப்பை இறுதி போட்டியில் சச்சின் மற்றும் சேவாக் ஆகியோரின் விக்கெட்டுகளை இந்திய அணி தொடக்கத்திலேயே இழந்துவிட்ட நிலையில், பொறுப்பாக ஆடி அணியை மீட்டெடுத்து, வெற்றிக்கு வித்திட்டவர் காம்பீர் தான். 

காம்பீர் கடந்த 2016ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக நடந்த தொடரில் ஆடியதுதான். அதன்பிறகு இந்திய அணியில் ஆடவில்லை. ஆனால் அவர் இன்னும் ஓய்வும் அறிவிக்கவில்லை. இந்நிலையில், தற்போது நடந்துவரும் உள்ளூர் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே தொடரில் டெல்லி அணியின் கேப்டனாக செயல்பட்டுவருகிறார்.

இந்த தொடரில் தொடர்ந்து காம்பீர் சிறப்பாக ஆடிவருகிறார். கேரள அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய காம்பீர் அபாரமாக ஆடி சதம் விளாசினார். 104 பந்துகளை எதிர்கொண்டு 18 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களுடன் 151 ரன்கள் குவித்தார் காம்பீர். துருவ் ஷோரே 99 ரன்களும் உன்முக்ட் சந்த் 69 ரன்களும் குவித்தனர். இதையடுத்து டெல்லி அணி 50 ஓவர் முடிவில் 392 ரன்களை குவித்தது. 393 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய கேரள அணி, 227 ரன்கள் மட்டுமே எடுத்ததால் 165 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி அபார வெற்றி பெற்றது. 

இந்த போட்டியில் காம்பீர் ஆடிய விதத்தை பார்த்த ரசிகர்கள், காம்பீர் மீண்டும் இந்திய அணியில் சேர்க்கப்பட வேண்டும் என சமூக வலைதளங்களில் வலியுறுத்திவருகின்றனர்.