ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களை வென்ற கையோடு நியூசிலாந்துக்கு சென்ற இந்திய அணி, நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரையும் வென்றுள்ளது. 

5 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் 3 போட்டிகள் முடிந்துள்ள நிலையில், மூன்றிலுமே வெற்றி பெற்று தொடரை வென்றது இந்திய அணி. இந்த தொடர் முழுவதுமே நியூசிலாந்து அணியின் மீது ஆதிக்கம் செலுத்தி அபாரமாக ஆடிய இந்திய அணி, சொந்த மண்ணில் அந்த அணியை வீழ்த்தி அபார வெற்றியை பதிவு செய்துள்ளது. 

தொடர்ச்சியாக ஆடிவரும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு நியூசிலாந்துக்கு எதிரான கடைசி இரண்டு ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 தொடரில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை ஏற்கனவே பிசிசிஐ வெளியிட்டது. நியூசிலாந்துக்கு எதிரான முதல் மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரை வென்றுவிட்டதால், மகிழ்ச்சியுடன் ஓய்வெடுக்க செல்கிறார் கேப்டன் விராட் கோலி.

இதையடுத்து கடைசி 2 போட்டிகளில் அவரது இடத்தில் இளம் வீரர் ஷுப்மன் கில் இறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பெண்கள் குறித்து இழிவாக பேசிய விவகாரத்தில் ராகுல் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை அடுத்து அவருக்கு பதிலாக நியூசிலாந்து அணியில் கில் சேர்க்கப்பட்டார். ராகுல் மீதான சஸ்பெண்ட் ரத்து செய்யப்பட்டு இந்தியா ஏ அணிக்காக ஆடிவருகிறார். எனவே அவருக்கு பதிலாக அணியில் சேர்க்கப்பட்ட கில், விராட் கோலியின் இடத்தில் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

விராட் கோலியும் மூன்றாவது போட்டிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது ஷுப்மன் கில்லின் திறமையை வெகுவாக புகழ்ந்து பேசினார். 

இந்நிலையில், கடைசி இரண்டு போட்டிகளிலும் ஷுப்மன் கில் கண்டிப்பாக ஆட வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி கருத்து தெரிவித்துள்ளார். 

ஷுப்மன் கில், ரஞ்சி டிராபியில் பஞ்சாப் அணிக்காக ஆடி 10 இன்னிங்ஸ்களில் 2 இரட்டை சதங்கள் மற்றும் 5 அரைசதங்கள் உட்பட 790 ரன்களை குவித்தார். மேலும் கடந்த ஆண்டு அண்டர் 19 உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் ஆடிய ஷுப்மன் கில், அந்த தொடர் முழுவதும் சிறப்பாக ஆடி தொடர் நாயகன் விருதையும் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஐபிஎல் சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஆடினார்.