அஷ்வின் பொறுமையற்று இருப்பதாகவும் அவரை அழைத்து கேப்டன் கோலி பேச வேண்டும் எனவும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி அறிவுரை வழங்கியுள்ளார். 

இந்தியா இங்கிலாந்து இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து டெஸ்ட் தொடரை 3-1 என இழந்தது. இந்த தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அஷ்வின், முதல் போட்டியில் மட்டுமே விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதன்பிறகு விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் திணறினார்.

முதல் போட்டியில் 7 விக்கெட்டுகளை வீழ்த்திய அஷ்வின், அதன்பிறகு மூன்று போட்டிகளில் சேர்த்தே 4 விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தினார். ஸ்பின் பவுலிங்கிற்கு சாதகமாக இருந்த சவுத்தாம்ப்டனில் நடந்த நான்காவது டெஸ்ட் போட்டியிலும் அஷ்வினால் சோபிக்க முடியாமல் போனது. முதல் போட்டியில் அஷ்வினின் பவுலிங்கில் திணறிய இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள், அதன்பிறகு மிகவும் தெளிவாக நிதானமாக அஷ்வினின் பந்தை எதிர்கொண்டு ஆடினர். ஸ்பின்னிற்கு சாதகமான சவுத்தாம்ப்டன் ஆடுகளத்தில் அவரது பந்தை விட்டு பேக்ஃபூட் ஆடினர் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள். இந்த போட்டியில் அஷ்வின் மூன்று விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தினார். ஒருவேளை அஷ்வின் சிறப்பாக பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்தி இங்கிலாந்துக்கு நெருக்கடி கொடுத்திருந்தால் போட்டியின் முடிவு வேறு மாதிரி இருந்திருக்கும்.

அஷ்வினால் விக்கெட் வீழ்த்த முடியாத நிலையில், இங்கிலாந்து அணியின் ஸ்பின்னரான மொயின் அலி 9 விக்கெட்டுகளை வீழ்த்தி அந்த அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். 

இந்நிலையில், அஷ்வினின் பவுலிங் மீது அதிருப்தியடைந்த முன்னாள் கேப்டன் கங்குலி, அஷ்வின் பொறுமையில்லாமல் இருக்கிறார். அவரை அழைத்து கேப்டன் கோலி பேச வேண்டும். அஷ்வினை விட மொயின் அலி பெரிய திறமைசாலி கிடையாது. மொயின் அலியை விட இருமடங்கு அஷ்வின் திறமைசாலி. ஆனால் மொயின் அலி எளிமையாக வீசி விக்கெட்டுகளை வீழ்த்திவிட்டார். ஆடுகளத்தில் இருந்த ரஃப் பேட்ச்சஸில்(ஆடுகளம் ஃபிளாட்டாக இல்லாத இடம்) பந்துகளை பிட்ச் செய்து, அதை பயன்படுத்தி விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆனால் அஷ்வின் அதை செய்வதை விடுத்து, 6 பந்துகளையும் 6 விதமாக வீசுகிறார். வெளிநாடுகளில் ஆடும்போது ரஃப் பேட்சஸை பயன்படுத்துவதை விடுத்து, தூஸ்ராவையும் லெக் ஸ்பின்னையும் வீசினார் அஷ்வின். 

நான் கேப்டனாக இருந்த சமயத்தில் வெளிநாடுகளில் ஆடும்போது, கும்ப்ளேவை காட்டிலும் ஹர்பஜன் சிங்கையே அதிக ஓவர்கள் வீச வைப்பேன். ஹர்பஜனுக்குத்தான் முன்னுரிமை கொடுப்பேன். ரஃப் பேட்சஸை பயன்படுத்த வேண்டும் என்பதற்காக ஹர்பஜனை அதிக ஓவர்கள் வீச வைப்பேன் என்றார் கங்குலி. மேலும் இதுதொடர்பாக அஷ்வினை அழைத்து கோலி பேசவேண்டும் எனவும் கங்குலி அறிவுரை கூறியுள்ளார்.