ganguly supports kohli

கோலியின் கேப்டன்சியின் மீது உடனடியாக சந்தேகங்களை எழுப்ப வேண்டிய தேவையில்லை என முன்னாள் கேப்டன் கங்குலி தெரிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தோல்வியுற்று டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்துள்ளது. தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரை கோலி தலைமையிலான இந்திய அணி வென்று வரலாற்று சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 3 டெஸ்ட் போட்டிகளிலும் தோற்று வரலாற்று தோல்வியை சந்திக்காமல் இருந்தாலே போதும் என நினைக்கும் அளவிற்கு இந்திய அணி விளையாடி வருகிறது.

டெஸ்ட் தொடரை இழந்ததற்காக என்பதற்கும் அப்பாற்பட்டு கேப்டன் கோலியின் ஆதிக்கம் மற்றும் அவரது அணுகுமுறை குறித்த விமர்சனங்களும் சந்தேகங்களும் வெகுவாக எழ தொடங்கியுள்ளன.

அரசியல் விமர்சகரும் பிசிசிஐ முன்னாள் உறுப்பினருமான ராமச்சந்திர குஹா மற்றும் தென்னாப்பிரிக்க முன்னாள் கேப்டன் கிரீம் ஸ்மித் ஆகியோர், கோலியை கட்டுப்படுத்தக் கூடிய அளவிலான பயிற்சியாளர் இந்திய அணிக்கு தேவை என்றும் கோலியின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் கருத்து தெரிவித்திருந்தனர்.

மேலும் இந்திய அணியின் நீண்டகால கேப்டன் தேர்வாக கோலி இருப்பாரா என்பது சந்தேகம்தான் என ஸ்மித் தெரிவித்திருந்தார். 

கேப்டனாக கோலி செய்யும் தவறுகளை யாரும் சுட்டிக் காட்டுவதில்லை. முன்பெல்லாம் களத்தில் சீனியர் வீரர்களின் அறிவுரையை கேட்டு கேப்டன்கள் செயல்படுவர். ஆனால் தற்போது அப்படியான சூழலை பார்க்க முடியவில்லை. எனவே கோலியின் தவறுகள் சுட்டிக்காட்டப்பட வேண்டும் என சேவாக் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு கோலியின் கேப்டன்சியின் மீதும் அவரது அணுகுமுறையின் மீதும் பல முன்னாள் வீரர்களும் கிரிக்கெட் விமர்சகர்களும் சந்தேகங்களை எழுப்பிவரும் நிலையில், கோலிக்கு ஆதரவளிக்கும் வகையில் முன்னாள் கேப்டன் கங்குலி குரல் கொடுத்துள்ளார்.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள கங்குலி, கோலியின் தலைமை பண்பு குறித்து தற்போதே விமர்சிப்பது தவறு. அவர் விஷயத்தில் கொஞ்சம் பொறுமையாக இருக்க வேண்டியது அவசியம்.

இன்னும் கொஞ்ச நாட்களின் கேப்டனாக கோலி நல்ல முன்னேற்றத்தை வெளிப்படுத்துவார் என கங்குலி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.