உலக கோப்பை நெருங்கிவிட்ட நிலையில், நீண்ட தேடுதல் வேட்டைக்கு பிறகு உறுதி செய்யப்பட்ட ஒரு பேட்டிங் வரிசைக்கு மாற்று வீரரை பரிந்துரைத்துள்ளார் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி. 

2019 உலக கோப்பை நெருங்கிவிட்ட நிலையில் இந்தியா, இங்கிலாந்து ஆகிய அணிகள் மிகவும் வலுவாக உள்ளன. இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. உலக கோப்பை இங்கிலாந்தில் நடப்பது அந்த அணிக்கு கூடுதல் பலம். அதேநேரத்தில் இந்திய அணியும் வலுவாக உள்ளது. 

இந்த இரண்டு அணிகளில் ஒன்றுதான் உலக கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவே பல முன்னாள் ஜாம்பவான்களின் கணிப்பாகவும் உள்ளது. பேட்டிங், பவுலிங் என இரண்டிலுமே வலுவாக உள்ள இந்திய அணிக்கு 4ம் வரிசை வீரர்தான் பெரும் சிக்கலாக இருந்தது. அந்த பிரச்னைக்கு ராயுடு மூலம் தீர்வு கிடைத்துள்ளதால் இந்திய அணியும் ரசிகர்களும் நிம்மதி பெருமூச்சுவிட்டனர். 

நான்காம் வரிசை வீரருக்கான தேடுதல் படலம் நீண்டகாலமாக நடந்துவந்தது. ஷ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக், ராயுடு என பல வீரர்களை அந்த இடத்தில் இறக்கிவிட்டு சோதிக்கப்பட்டது. ஆனால் ராயுடு மட்டுமே அந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு நான்காம் வரிசை வீரருக்கான இடத்தை பற்றிக்கொண்டார். ஆசிய கோப்பையில் சிறப்பாக ஆடிய ராயுடு, வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடரிலும் அபாரமாக ஆடி இடத்தை உறுதி செய்துகொண்டார். 

உலக கோப்பைக்கு முன்னதாக ஆஸ்திரேலியாவில் அந்த அணிக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகளிலும் நியூசிலாந்தில் அந்த அணிக்கு எதிராக 5 ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணி ஆட உள்ளது. இந்த இரண்டு தொடர்களுக்குமான ஒருநாள் அணி அண்மையில் அறிவிக்கப்பட்டது. உலக கோப்பையை மனதில் வைத்து அதன் முன்னோட்டமாக அறிவிக்கப்பட்ட இந்த அணியில் இளம் வீரர் ரிஷப் பண்ட் சேர்க்கப்படவில்லை. 

இந்நிலையில், அவரை உலக கோப்பையில் ஆடவைக்க வேண்டும் என்றும் ராயுடு லாக் செய்துவிட்ட 4ம் வரிசையில் ரிஷப் பண்ட்டை களமிறக்க வேண்டும் என்றும் கூறி புதிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளார் கங்குலி. 

ரிஷப் பண்ட் குறித்து பேசிய கங்குலி, ரிஷப் பண்ட் மிகச்சிறந்த வீரர். அவரை அனைத்து விதமான போட்டிகளிலும் ஆடவைக்க வேண்டும் என்பதை தேர்வாளர்களுக்கு நான் சொல்ல விரும்புகிறேன். ரிஷப் பண்ட் உலக கோப்பையில் மேட்ச் வின்னராக திகழ்வார். ரிஷப் பண்ட்டை ஒருநாள் போட்டிகளில் நான்காம் வரிசையில் இறக்கலாம். அவர் வேகப்பந்து வீச்சை சர்வ சாதாரணமாக எதிர்கொண்டு அடித்து ஆடுகிறார். அசால்ட்டாக பவுண்டரிகளை விளாசுகிறார். ஆட்டத்தையே மாற்றக்கூடிய வீரர்கள் அணியில் கண்டிப்பாக தேவை. ரோஹித், தவான், கோலி ஆகிய மூவரும் ஆட்டத்தை மாற்றக்கூடிய வீரர்கள். அவர்களுக்கு அடுத்து ரிஷப் பண்ட் தான் அதை செய்யக்கூடியவர். தோனி, ராயுடு, கேதர் ஜாதவ் ஆகியோர் அவரவர் ஆட்டத்தை ஆடுவர். ஆனால் ரிஷப் பண்ட், வெறும் 5 ஓவர்களில் ஆட்டத்தையே புரட்டிப்போடும் திறன்பெற்றவர். அவரை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான ஒருநாள் அணியில் ரிஷப்பை சேர்க்க வேண்டும். உலக கோப்பைக்கான அணியிலும் அவரை எடுக்க வேண்டும் என்று கங்குலி வலியுறுத்தியுள்ளார்.