தற்போதைய இந்திய கிரிக்கெட் சர்வதேச அளவில் மிகச்சிறந்த அணியாக திகழ்கிறது. இந்திய அணியின் தற்போதைய அபரிமிதமான வளர்ச்சி, கோலியால் மட்டுமே வந்துவிடவில்லை. இதற்கு முன்னர் கேப்டன்களாக இருந்த கங்குலி, தோனி ஆகியோர், கொஞ்சம் கொஞ்சமாக இந்திய அணியை வளர்த்தெடுத்துள்ளனர்.

கங்குலி மற்றும் தோனி ஆகியோரின் பங்களிப்பு அளப்பரியது. அதிலும் 2003 உலக கோப்பையின் இறுதி போட்டிவரை அழைத்து சென்ற அப்போதைய கேப்டன் கங்குலியின் தலைமையில் இந்திய அணி, சிறப்பான வளர்ச்சியைக் கண்டது.

ஆனால், கங்குலி கேப்டனாக இருந்தபோது பயிற்சியாளராக இருந்த கிரேக் சேப்பலுக்கும் கங்குலிக்கும் கருத்து வேறுபாடும் மோதலும் நீடித்து வந்தன. இருவரும் எதிரும் புதிருமாக செயல்பட்டனர். இருவருக்கும் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் பிடிக்காது. பரஸ்பரம் குற்றச்சாட்டுகளையும் விமர்சனங்களையும் வெளிப்படையாகவே முன்வைக்கும் அளவுக்கு மோதல் இருந்தது அனைவரும் அறிந்ததே.

இந்த மோதலின் உச்சகட்டமாக எந்தவித காரணமுமின்றி கங்குலியை கேப்டன் பதவியிலிருந்து சேப்பல் நீக்கினார். இதுதொடர்பான தனது ஆதங்கத்தையும் கோபத்தையும் கங்குலி வெளிப்படுத்தியிருந்தார். 

இந்நிலையில், கிரேக் சேப்பல் குறித்த மற்றொரு தகவலையும் தனது சுயசரிதையில் கங்குலி கூறியுள்ளார். அதில், கிரேக் சேப்பல் இந்திய அணியின் பயிற்சியாளராவதற்கு முன்பு பல சூழ்நிலைகளில் சந்தித்து பேசியுள்ளேன். அப்போதெல்லாம் அவரது கிரிக்கெட் அறிவை கண்டு வியந்தேன். அதனால், ஜான் ரைட்டின் பதவிக்காலம் முடிந்தவுடன் சேப்பலை இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கமாறு எனது தனிப்பட்ட விருப்பத்தை அப்போதைய பிசிசிஐ தலைவராக இருந்த ஜக்மோகன் டால்மியாவிடம் தெரிவித்தேன்.

ஜக்மோகன் டால்மியா, கிரேக் சேப்பலின் சொந்த சகோதரர் இயான் சேப்பல், சுனில் கவாஸ்கர் ஆகியோர் கிரேக் சேப்பல் வேண்டாம் என என்னிடம் வலியுறுத்தினர். பயிற்சியாளராக சேப்பலின் பணி சிறப்பானதாக இல்லை; அவரை வைத்துக்கொண்டு அணியை நிர்வகிப்பதில் உங்களுக்கு பிரச்னைகள் வரும் என அறிவுறுத்தினர். ஆனால் நான் அவர்களின் யோசனையை நிராகரித்து, எனது உள்ளுணர்வை உறுதியாக நம்பினேன். ஆனால் அவர் நியமனத்துக்குப் பின்னர் நிகழ்ந்த வரலாற்றை உலகம் அறியும் என்று கங்குலி ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.