இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு முன்னாள் கேப்டன் கங்குலி அவ்வப்போது பல அறிவுரைகளை வழங்கிவருகிறார். ஆனால் கோலி அவற்றையெல்லாம் கவனிக்கிறாரா? கங்குலியின் வார்த்தைகளுக்கு செவி மடுக்கிறாரா? என்பதெல்லாம் பெரும் கேள்வியாகவே இருக்கிறது. 

கேப்டன் விராட் கோலியின் கேப்டன்சியின் மீது ஏராளமான விமர்சனங்கள் உள்ளன. குறிப்பாக கள வியூகம், பவுலர்களை பயன்படுத்தும் முறை, வீரர்களை கையாளும் முறை ஆகியவை கடும் விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளன. இவற்றில் எல்லாம் கோலியின் கேப்டன்சியில் குறைபாடுகள் இருப்பதை பார்க்கமுடிகிறது. 

வீரர்களை கையாளுவதற்கு பெயர்போனவர் முன்னாள் கேப்டன் கங்குலி. இந்திய அணியின் மிகச்சிறந்த கேப்டன்களில் ஒருவர் கங்குலி. அவர் கேப்டனாக இருந்த காலத்தில் சச்சின் டெண்டுல்கர், டிராவிட், அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங், சேவாக், விவிஎஸ் லட்சுமண் ஆகிய அனுபவம் வாய்ந்த சிறந்த வீரர்கள் இருந்தனர். அனைவரையும் ஒருங்கிணைத்து அருமையாக அணியை வழிநடத்தி சென்றார். 

வீரர்களை கையாள்வதில் கைதேர்ந்த கங்குலி, தற்போதைய கேப்டன் கோலிக்கு கேப்டன்சி தொடர்பான அறிவுரைகளை வழங்கியுள்ளார். இதுதொடர்பாக பேசியுள்ள கங்குலி, ஒரு கேப்டனாக எப்போதுமே நாம் சொல்வதை மட்டுமே நியாயப்படுத்தக்கூடாது. வீரர்கள் எதை பின்பற்ற விரும்புகிறார்களோ அதை பின்பற்ற வேண்டும். ஏனென்றால் சில நேரங்களில் அவர்கள் உங்களை விட நல்ல திட்டத்தை வைத்திருப்பார்கள். அதனால் எப்போதுமே நாம் சொல்வதைத்தான் கேட்கவேண்டும் என நினைக்காமல் வீரர்களை அனுசரித்து செல்ல வேண்டும். 

வீரர்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டியதுதான். அதற்காக ஓரளவிற்கு மேல் அதிகமாக அழுத்தம் கொடுத்தால் அவர்களால் சிறப்பாக ஆடமுடியாது. அது அவர்களது ஆட்டத்தை பாதிக்கும். அவர்களின் கருத்துகளை சொல்ல அனுமதித்து அவற்றையும் காது கொடுத்து கேட்க வேண்டும். ஒவ்வொரு வீரரையும் தலைவராக உணரவைக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் கூடுதல் பொறுப்புடன் ஆடுவார்கள் என கங்குலி அறிவுறுத்தியுள்ளார்.