உலக கோப்பையில் அஷ்வின் கண்டிப்பாக ஆடவேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் காம்பீர் கருத்து தெரிவித்துள்ளார். 

தோனி தலைமையிலான இந்திய அணியின் நட்சத்திர ஸ்பின்னராக திகழ்ந்தவர் அஷ்வின். அஷ்வின் - ஜடேஜா சுழல் ஜோடி, தோனி தலைமையிலான இந்திய அணிக்கு பல வெற்றிகளை பெற்று கொடுத்துள்ளது. இந்திய அணியின் முதன்மை ஸ்பின்னராக இருந்த அஷ்வின், கடந்த ஓராண்டுக்கும் மேலாக ஒருநாள் போட்டிகளில் ஆடவில்லை. டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடிவருகிறார். 

கோலி தலைமையிலான இந்திய அணியில் ரிஸ்ட் ஸ்பின்னர்களான குல்தீப் யாதவ் மற்றும் சாஹலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இவர்கள் இருவருமே கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி அருமையாக பந்துவீசினர். தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா என உலகின் பல சிறந்த பேட்டிங் வரிசைகளை சிதைத்தனர். குல்தீப் - சாஹல் ரிஸ்ட் ஸ்பின் ஜோடி தான் தற்போது வரை ஒருநாள் போட்டிகளில் ஆடிவருவதால், உலக கோப்பையில் இவர்கள் இருவரும்தான் ஆடும் வாய்ப்பு உள்ளது. 

ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓரங்கட்டப்பட்ட அஷ்வின், மீண்டும் ஒருநாள் அணியில் இடத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறார். ஆனால் அவருக்கு மீண்டும் ஒருநாள் அணியில் இடம் கிடைப்பதோ அல்லது உலக கோப்பையில் ஆடுவதோ சந்தேகம் தான். 

இந்நிலையில், உலக கோப்பையில் அஷ்வின் கண்டிப்பாக ஆட வேண்டும் என்று அவருக்கு ஆதரவாக கவுதம் காம்பீர் குரல் கொடுத்துள்ளார். இதுகுறித்து பேசிய காம்பீர், ரிஸ்ட் ஸ்பின்னர்களான குல்தீப்பும் சாஹலும் கடந்த ஓராண்டாக அருமையாக பந்துவீசி வருகின்றனர். ஆனால் அதற்காக நாம் அஷ்வினை ஓரங்கட்டிவிட முடியாது. அஷ்வின் கண்டிப்பாக ஒருநாள் அணியில் தேவை. ரிஸ்ட் ஸ்பின்னர், விரல் ஸ்பின்னர் என்ற பாகுபாட்டை கடந்து ஒரு தரமான ஸ்பின்னர் என்றுமே தரமான ஸ்பின்னர் தான். அந்த வகையில் அஷ்வின் ஒரு தரமான ஸ்பின்னர். 

சமகால கிரிக்கெட்டின் சிறந்த ஸ்பின்னராக திகழும் ஆஸ்திரேலியாவின் நாதன் லயன் ஒரு ஆஃப் ஸ்பின்னர் தான். எனவே ரிஸ்ட் மற்றும் விரல் ஸ்பின்னர்களை வேறுபடுத்தி பார்க்கக்கூடாது என்பது என் கருத்து. உலக கோப்பை நடக்க உள்ள இங்கிலாந்து ஆடுகளங்கள் ஃபிளாட்டாக இருக்கும். எனவே அங்கு அஷ்வினின் ஸ்பின் பவுலிங் எடுபடும். அதுமட்டுமல்லாமல் அஷ்வின் பேட்டிங்கும் ஆடக்கூடியவர் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். எனவே உலக கோப்பையில் அஷ்வின் ஆட வேண்டும் என்று காம்பீர் கருத்து தெரிவித்துள்ளார்.