gambhir step down as delhi daredevils captain
ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு, சரியாக விளையாடாததற்காக ஊதியத்தை விட்டுக்கொடுக்க கம்பீர் முன்வந்துள்ளார்.
ஐபிஎல் 11வது சீசன் நடந்துவருகிறது. இதுவரை நடந்து முடிந்துள்ள 10 ஐபிஎல் சீசன்களில் ஒரு சீசனில் கூட டெல்லி அணி பெரிதாக சோபிக்கவில்லை. இதுவரை ஐபிஎல் இறுதி போட்டிக்கு ஒருமுறை கூட தகுதிபெறாத ஒரே அணி டெல்லி தான்.
அதனால் இந்த முறை ஐபிஎல் தொடரை வெல்லும் நோக்கில், கொல்கத்தா அணிக்கு இருமுறை கோப்பையை வென்று கொடுத்த கம்பீரை ஏலத்தில் எடுத்து டெல்லி அணி நிர்வாகம் கேப்டனாக நியமித்தது. ஆஸ்திரேலியாவின் முன்னாள் வெற்றி கேப்டன் ரிக்கி பாண்டிங்கை பயிற்சியாளராக நியமித்தது.

ரிக்கி பாண்டிங் பயிற்சியாளர், கம்பீர் கேப்டன். ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், பிரித்வி ஷா போன்ற இந்தியாவின் அதிரடியான இளம் வீரர்கள். ஜேசன் ராய், கோலின் முன்ரோ, மேக்ஸ்வெல் போன்ற வெளிநாட்டு வீரர்கள் என நம்பிக்கையுடன் களம் கண்ட டெல்லி அணிக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது.
இதுவரை ஆடியுள்ள 6 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. பெரிதும் நம்பப்பட்ட கௌதம் கம்பீர், 6 போட்டிகளில் வெறும் 85 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றம் அளித்துள்ளார். மிகச்சிறந்த வீரரான கம்பீர், கொல்கத்தா அணிக்கு இருமுறை ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்துள்ளார். இந்திய அணியின் வெற்றிக்கும் பல நேரங்களில் காரணமாக திகழ்ந்தவர். 2011 உலக கோப்பை இறுதி போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை வெல்ல முக்கிய காரணம் கம்பீர்தான்.
இப்படி மிகச்சிறந்த வீரரான கம்பீர், தொடர் தோல்விகளினால் ஏற்பட்ட அழுத்தத்தால் பேட்டிங்கிலும் கவனம் செலுத்த முடியவில்லை. தொடர் தோல்விகளுக்கு பொறுப்பேற்று டெல்லி அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினார். இதையடுத்து ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியது மட்டுமல்லாமல், தனது ஆட்டத்திறன் சரியில்லாமல் திணறிவருவதால், இந்த ஐபிஎல் தொடரில் தனது ஊதியமான 2.8 கோடி ரூபாயை விட்டுத்தரவும் முன்வந்துள்ளார். இதுவரை ஐபிஎல் வரலாற்றில், சரியாக விளையாடாததால் ஊதியத்தை விட்டுக்கொடுக்கும் முதல் வீரர் கம்பீர் தான்.
தான் ஒரு சிறந்த வீரர் என்பதை கடந்து சிறந்த மனிதர் என்பதையும் கம்பீர் நிரூபித்துவிட்டார்.
