பாகிஸ்தானுக்கு எதிராக ஆடுவதற்கு பயந்துதான் இந்திய அணியின் கேப்டன் கோலி, ஆசிய கோப்பையில் ஆடவில்லை என விமர்சித்த பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் தன்வீர் அகமதுவிற்கு கவுதம் காம்பீர் தக்க பதிலடி கொடுத்துள்ளார். 

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தொடர்ந்து ஓய்வில்லாமல் ஆடிக்கொண்டிருப்பதால் ஆசிய கோப்பை தொடரில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் இரண்டரை மாதத்திற்கும் மேலாக சுற்றுப்பயணம் செய்து இந்திய அணி ஆடியது. இதில் அனைத்து போட்டிகளிலும் ஆடிய விராட் கோலிக்கு, ஆசிய கோப்பையில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. 

விராட் கோலி இல்லாததால் ஆசிய கோப்பையில் ரோஹித் சர்மா இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். ரோஹித் சிறப்பாகவே கேப்டன்சி செய்கிறார். ஹாங்காங் மற்றும் பாகிஸ்தான் அணிகளை வீழ்த்தி சூப்பர் 4 சுற்றுக்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது. 

கோலி இல்லாவிட்டாலும் இந்திய அணி வலுவாகவே இருக்கிறது என்பது கங்குலி, காம்பீர், சேவாக் உள்ளிட்ட முன்னாள் வீரர்களின் கருத்து. அதை உறுதி செய்யும் வகையில், இந்திய அணியும் சிறப்பாகவே ஆடிவருகிறது.

இந்நிலையில், ஆசிய கோப்பையில் கோலி ஆடாதது குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் தன்வீர் அகமது, வேண்டுமென்றே கோலியை சாடியுள்ளார். இதுதொடர்பாக பேசியுள்ள தன்வீர் அகமது, இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் முதுகு வலியால் அவதிப்பட்ட போதிலும் அனைத்து போட்டிகளிலும் கோலி ஆடினார். அப்படியென்றால் அவரால் ஆசிய கோப்பையிலும் ஆடியிருக்க முடியும். ஆனால் இறுதி போட்டி உட்பட மூன்று முறை பாகிஸ்தானுடன் மோத வேண்டியிருக்கும் என்பதை அறிந்த கோலி, அதற்கு பயந்தே ஆசிய கோப்பையில் ஆடவில்லை என கடுமையாக சாடியுள்ளார். 

தன்வீர் அகமதுவிற்கு கவுதம் காம்பீர் தக்க பதிலடி கொடுத்துள்ளார். காம்பீர் எப்போதுமே நேர்மையாக தனது மனதில் இருக்கும் கருத்தை வெளிப்படையாகவும் அதிரடியாகவும் தெரிவிக்கக்கூடியவர். அந்த வகையில் தன்வீர் அகமதுவிற்கு பதிலடி கொடுத்துள்ள காம்பீர், விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட்டில் 35 சதங்களை அடித்துள்ளார். ஆனால் தன்வீர் அகமது 35 போட்டிகளில் கூட ஆடியதில்லை என்று பதிலடி கொடுத்துள்ளார்.

விராட் கோலி அடித்துள்ள சதங்களின் எண்ணிக்கையிலான போட்டிகளில் கூட தன்வீர் ஆடியதில்லை. எனவே கோலியை பற்றி பேச தன்வீருக்கு தகுதியில்லை என்பதை ஒரே வாக்கியத்தில் உணர்த்தியுள்ளார் காம்பீர்.