இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா மற்றும் கேஎல் ராகுல் ஆகிய இருவரும் அண்மையில் ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பெண்கள் குறித்து பேசிய விவகாரம் பெரிய சர்ச்சையை கிளப்பியது. இந்த விவகாரம் அவர்களின் கிரிக்கெட் வாழ்க்கையை கடுமையாக பாதித்துள்ளது. 

கிரிக்கெட் அல்லாத ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டது பெரிய சர்ச்சையாக வெடித்தது. இந்த சம்பவத்திற்கு வருந்தி பிசிசிஐ-யிடம் ஹர்திக் பாண்டியா மன்னிப்பு கோரினார். எனினும் இதுகுறித்து விசாரிக்கப்பட்டு வருவதால் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்த பாண்டியாவும் ராகுலும் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை அடுத்து உடனடியாக ஆஸ்திரேலியாவிலிருந்து நாடு திரும்பினர். பாண்டியாவிற்கு பதிலாக விஜய் சங்கரும் ராகுலுக்கு பதிலாக ஷுப்மன் கில்லும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்திய அணியில் டாப் ஆர்டர் பேட்டிங் வலுவாக உள்ளதால், டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான ராகுல் அணியில் ஆடியிருக்க வாய்ப்பில்லை. ஆனால் ஹர்திக் பாண்டியாவுக்குத்தான் பெரும் இழப்பு. ஏற்கனவே காயம் காரணமாக இரண்டு மாதங்களுக்கு மேலாக ஆடாமல் இருந்த பாண்டியா, ஆஸ்திரேலிய தொடரில் ஆட இருந்த நிலையில் இப்படி ஆகிவிட்டது. ஐபிஎல்லிலும் ஹர்திக் பாண்டியா ஆடுவார் என்பது சந்தேகம்தான். உலக கோப்பை நெருங்கிவிட்ட நிலையில், அணியில் இடம்பெறாமல் பெரும்பாலான போட்டிகளை இழந்துவரும் ஹர்திக், உலக கோப்பையில் ஆடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

நல்ல ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியாவின் இடத்தை ஜடேஜா பூர்த்தி செய்துள்ளார். உலக கோப்பையில் ஹர்திக் பாண்டியா கண்டிப்பாக ஆட வேண்டும் என்று சில முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர். அதேநேரத்தில் ஹர்திக் பாண்டியா ஆடாததால் பெரிய பாதிப்பு இருக்காது என்பதால் அவர் ஆட வேண்டிய அவசியமில்லை என்று சிலரும் கருத்து தெரிவித்துவருகின்றனர். 

இந்நிலையில், இதுகுறித்து தனது கருத்தை தெரிவித்துள்ள முன்னாள் வீரர் கவுதம் காம்பீர், ஒரு வீரர் அணியில் இல்லாதது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி விடாது. ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவின் இடத்தை ஜடேஜாவை வைத்து நிரப்பிவிடலாம். உலக கோப்பைக்கு முன்னதாக நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய தொடர்கள் மட்டுமே உள்ளன. எனவே உலக கோப்பையின் முதல் போட்டியில் வலுவான அணியுடன் களமிறங்க வேண்டும். உலக கோப்பை நெருங்கிவிட்டதால், அணியில் அடிக்கடி மாற்றம் செய்வது நல்லதல்ல என்று காம்பீர் தெரிவித்துள்ளார்.