விஜய் ஹசாரே டிராபி தொடரில் டெல்லி மற்றும் சவுராஷ்டிரா அணிகளுக்கு இடையேயான போட்டியின்போது, ரசிகர் ஒருவர் மைதானத்துக்குள் ஓடி வீரர் ஒருவரின் காலில் விழுந்தார். 

விஜய் ஹசாரே தொடர் நடந்துவருகிறது. இதில், தமிழ்நாடு, டெல்லி, ஆந்திரா, மும்பை, உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல அணிகள் கலந்துகொண்டு ஆடிவருகின்றன. கடந்த 20ம் தேதி டெல்லி பெரோஷ் ஷா கோட்லா மைதானத்தில் டெல்லி மற்றும் சவுராஷ்டிரா அணிகளுக்கு எதிரான போட்டி நடந்தது. 

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த சவுராஷ்டிரா அணி, 237 ரன்கள் எடுத்தது. 238 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 46 ஓவரில் இலக்கை எட்டி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இந்த போட்டியில் டெல்லி அணியின் கேப்டனும் தொடக்க வீரருமான கவுதம் காம்பீர் 48 பந்துகளில் 62 ரன்கள் எடுத்தார். காம்பீர் பேட்டிங் செய்துகொண்டிருந்த போது, மைதானத்தில் இருந்த காம்பீரின் ரசிகர் ஒருவர், தடுப்பை தாவிக்குதித்து மைதானத்திற்குள் ஓடி காம்பீரின் காலில் விழுந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அந்த ரசிகர் மைதானத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டார். 

இந்த சம்பவத்தை மைதானத்தில் இருந்த மற்ற ரசிகர்கள் வீடியோ எடுத்தனர். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. 

இந்திய அணியின் மிக முக்கிய வீரராக திகழ்ந்தவர் கவுதம் காம்பீர். டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான காம்பீர், இந்திய அணிக்காக 58 டெஸ்ட் மற்றும் 147 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ளார். இந்திய அணி பல வெற்றிகளை குவிக்க காரணமாக திகழ்ந்தவர் காம்பீர். 2011 உலக கோப்பை இறுதி போட்டியில் சச்சின், சேவாக் ஆகிய இருவரின் விக்கெட்டுகளையும் தொடக்கத்திலேயே இழந்த இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்து வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் காம்பீர். காம்பீருக்கும் ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளதை இந்த சம்பவம் வெளிக்காட்டியுள்ளது.