தியோதர் டிராபி தொடருக்கான அணிகளில் தினேஷ் கார்த்திக், அஷ்வின், ரஹானே, பிரித்வி ஷா ஆகிய வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. 

தியோதர் டிராபி தொடர் வரும் 23ம் தேதி தொடங்குகிறது. அதற்கான இந்தியா ஏ, பி, சி ஆகிய அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெறாத வீரர்கள் இடம்பெற்று ஆடுகின்றனர்.

ஒருநாள் போட்டிகளிலிருந்து புறக்கணிக்கப்பட்டு டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடிவரும் ரஹானே, அஷ்வின் உள்ளிட்ட வீரர்கள் தியோதர் டிராபி தொடருக்கான அணிகளில் இடம்பெற்றுள்ளனர். 

தினேஷ் கார்த்திக் தலைமையிலான இந்தியா ஏ அணியில் பிரித்வி ஷா, நிதிஷ் ராணா, கருண் நாயர், குருணல் பாண்டியா, அஷ்வின், சித்தார்த் கவுல் உள்ளிட்ட வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். 

ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்தியா பி அணியில் மயன்க் அகர்வால், ஹனுமா விஹாரி, மனோஜ் திவாரி, தீபக் சாஹர், வருண் ஆரோன், உனாத்கத் உள்ளிட்ட வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். 

ரஹானே தலைமையிலான இந்தியா சி அணியில் ரெய்னா, இஷான் கிஷான், வாஷிங்டன் சுந்தர், விஜய் சங்கர், நவ்தீப் சைனி, சுப்மன் கில் உள்ளிட்ட வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். 

உலக கோப்பைக்கு இன்னும் ஓராண்டுக்கும் குறைவாகவே உள்ளதால் அதற்குள்ளாக வலுவான இந்திய அணியை உருவாக்கும் முனைப்பில் அணி நிர்வாகம் உள்ளது. அதற்காக பல வீரர்கள் சோதனை செய்யப்பட்டு பார்க்கின்றனர். 

ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஓரங்கட்டப்பட்ட அஷ்வின், ரஹானே ஆகிய வீரர்களும் அணியிலிருந்தே ஓரங்கட்டப்பட்ட காம்பீர், யுவராஜ் சிங் ஆகிய வீரர்களும் அடுத்த ஆண்டு இங்கிலாந்தில் நடக்கும் உலக கோப்பையில் இந்திய அணிக்காக ஆடுவதற்காக கடுமையான பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். 

தியோதர் டிராபிக்கான அணியில் ரஹானே, அஷ்வின் ஆகிய வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில், விஜய் ஹசாரே தொடரில் அருமையாக ஆடிவரும் காம்பீருக்கு வாய்ப்பு வழங்கப்படாதது ஆச்சரியமான விஷயம். இது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த தொடரில் சிறப்பாக ஆடும் வீரர்களுக்கு ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் வாய்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் ரஹானே, ரெய்னா, அஷ்வின் ஆகியோர் மீண்டும் இந்திய அணியில் இடம்பெறும் விதமாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் முனைப்பில் உள்ளனர்.