இந்திய கேப்டன் தோனி தொடர்ந்து 4-ஆவது இடத்திலேயே களமிறங்க வேண்டும் என முன்னாள் இந்திய கேப்டன் செளரவ் கங்குலி தெரிவித்தார்.
நியூசிலாந்திற்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் தோனி 4-ஆவது இடத்தில் களமிறங்கி விளையாடி வருகிறார்.
இந்த நிலையில், கங்குலி கூறியதாவது: “தோனி தொடர்ந்து 4-ஆவது இடத்திலேயே களமிறங்க வேண்டும். அங்கிருந்து அவர் ஆட்டத்தை வெற்றியில் முடிக்க வேண்டும். ஆட்டத்தை வெற்றியில் முடிக்கக்கூடிய ஒரு வீரர் 40-ஆவது ஓவருக்குப் பிறகுதான் களமிறங்க வேண்டும் என்று அர்த்தமில்லை.
விராட் கோலி இப்போது 3-ஆவது இடத்தில் களமிறங்கி வெற்றி தேடித் தருகிறார். ஆட்டத்தை வெற்றியில் முடிக்கும் வீரர் பின்வரிசையில்தான் களமிறங்க வேண்டும் என்பது தவறான உத்தியாகும். எனவே வரக்கூடிய ஆட்டங்களில் தோனி 4-ஆவது வீரராகவே களமிறங்க வேண்டும் என்றார்.
விராட் கோலி குறித்துப் பேசிய கங்குலி, "கோலி தலைசிறந்த வீரர்தான். ஆனால் அவரை மட்டுமே நம்பியிருப்பது என்பது சரியானதல்ல.
நியூசிலாந்தும் தலைசிறந்த அணிதான். அவர்களும் சில ஆட்டங்களில் வெல்லக்கூடும்' என்றார்.
