ஃபார்மில் இல்லாமல் தொடர்ந்து பேட்டிங்கில் சொதப்பிவரும் தோனிக்கு வரிந்துகட்டி ஆதரவு தெரிவித்துள்ளார் ஆஷீஸ் நெஹ்ரா.

இந்திய அணியின் சீனியர் வீரரான தோனி, அண்மைக்காலமாக சரியான ஃபார்மில் இல்லாமல் தவித்துவருகிறார். கடந்த ஓராண்டாகவே அவர் சரியாக ஆடவில்லை. ரன்களை எடுக்க திணறுகிறார். தோனி பேட்டிங் சரியாக ஆடாவிட்டாலும் அவரது அனுபவம் வாய்ந்த ஆலோசனைகளும் விக்கெட் கீப்பிங்கும் இந்திய அணிக்கு தேவை என்பதால் அடுத்த ஆண்டு நடக்க உள்ள உலக கோப்பை வரை ஆடுவார் என்று கூறப்படுகிறது. 

அதேநேரத்தில் மிடில் ஆர்டரில் பிரச்னை நீடித்துவரும் நிலையில், தோனியும் ஃபார்மில் இல்லாததால் பெரும் சிக்கலாக உள்ளது. எனவே தோனியின் நடப்பு ஃபார்மை கருத்தில் கொண்டு ஒருதரப்பு கடுமையாக விமர்சிக்கிறது. உலக கோப்பை அணியில் தோனியின் இருப்பு குறித்த சந்தேகத்தையும் எழுப்புகிறது. 

ஆனால் இளம் பவுலர்கள் மட்டுமல்லாமல் கேப்டன் வரைக்கும் தோனியின் ஆலோசனை தேவைப்படுவதால் அணியில் அனுபவ வீரர் என்ற வகையில் அவர் ஆடுவது அவசியம். பேட்டிங்கில் எப்போது வேண்டுமானாலும் ஃபார்முக்கு வந்துவிடலாம். அது என்ன பெரிய விஷயமா? என்றும் சில முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இதற்கிடையே வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து தோனி நீக்கப்பட்டது, தோனியை ஓரங்கட்டும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது. 

தோனியின் நீக்கம் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ள நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்த கவாஸ்கர், தோனியின் ஆலோசனை கேப்டன் கோலிக்கு தேவை என்பதால் உலக கோப்பையில் கண்டிப்பாக தோனி ஆடவேண்டும் என்று தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், தோனி குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆஷீஸ் நெஹ்ரா, பண்ட், தினேஷ் கார்த்திக் ஆகியோர் ஓரளவுக்கு நன்றாக ஆடுகின்றனர். அவர்கள் என்னதான் ஆடினாலும் தோனி, தோனிதான். அவர் பக்கத்தில்கூட யாரும் வரமுடியாது. தோனியின் ஆலோசனை சாஹல், குல்தீப் ஆகியோரை கடந்து கேப்டன் கோலிக்கே கூட உதவிகரமாக இருக்கும். தோனிக்குத் தான் என்ன செய்கிறோம் என்பது நன்றாக தெரியும். ஆசிய கோப்பை மற்றும் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடர் ஆகியவற்றில் தோனி சரியாக ஆடவில்லை என்றபோதிலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு இன்னும் 2 மாதங்கள் அவகாசம் உள்ளது. அதற்குள் தோனி தயாராகி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் சிறப்பாக ஆடுவார் என்று நெஹ்ரா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.