தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் 4 நாடுகள் மகளிர் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 249 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்தைத் தோற்கடித்தது.

தென் ஆப்பிரிக்காவில் 4 நாடுகள் மகளிர் கிரிக்கெட் தொடர் போட்செப்ஸ்டிரோம் நகரில் நேற்று நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 358 ஓட்டங்கள் எடுத்து ரனகளம் செய்தது.

ஒரு நாள் கிரிக்கெட்டில் இந்திய மகளிர் அணி 300 அல்லது அதற்கு மேற்பட்ட ஓட்டங்களை குவிப்பது இதுவே முதல்முறை.

இந்தியாவின் தீப்தி சர்மா - பூனம் ரெளத் இணை முதல் விக்கெட்டுக்கு 45.3 ஓவர்களில் 320 ஓட்டங்கள் குவித்ததன்மூலம் சர்வதேச அளவில் ஒரு விக்கெட்டுக்கு அதிக ஓட்டங்கள் குவித்த இணை என்ற உலக சாதனையைப் படைத்தது.

இந்த ஆட்டத்தில் 188 ஓட்டங்கள் குவித்ததன் மூலம் சர்வதேச அளவில் ஓர் ஆட்டத்தில் அதிக ஓட்டங்கள் குவித்தவர்கள் வரிசையில் 2-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார் தீப்தி சர்மா.

பூனம் ரெளத் 109 ஓட்டங்கள் குவித்த நிலையில் ரிட்டையர்ட் ஹர்ட் முறையில் வெளியேறினார்.

பின்னர் ஆடிய அயர்லாந்து அணி 40 ஓவர்களில் 109 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இதன்மூலம் 4 நாடுகள் மகளிர் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 249 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தியது.