fix CCTV cameras - weight lifting champion voluntarily demanding
ஊக்க மருந்து புகாரை தடுக்க தங்கும் அறையில் சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும் என்று உலக பளு தூக்கும் சாம்பியன் மீராபாய் சானு கோரிக்கை வைத்துள்ளார்.
உலக சாம்பியனும், காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவருமான மீராபாய் சானு கடந்த நான்கு ஆண்டுகளில் 45 முறை ஊக்கமருந்து சோதனைக்கு உள்படுத்தப்பட்டார். ஆனால், சோதனையில் வெற்றி கண்டு வெளிவந்தார்.
இது தொடர்பாக இந்திய பளுதூக்கும் சம்மேளனம், மத்திய விளையாட்டு அமைச்சகத்திற்கு மீராபாய் சானு கோரிக்கை ஒன்றை விடுத்தார்.
அதில், "ஊக்க மருந்து புகாரில் என்னை சிக்க வைக்க சிலர் முயற்சிக்கலாம். எனவே நான் பயிற்சி செய்யும் அறை, உணவருந்தும் இடம், தங்கும் அறையில் சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும். அப்போதுதான் நிம்மதியாக பயிற்சி பெற முடியும்" என்று அதில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இந்திய பளு தூக்கும் சம்மேளனமும் முக்கிய இடங்களில் சிசிடிவி கேமராக்களை பொருத்த பரிந்துரைத்துள்ளது. பாட்டியாலாவில் தேசிய பயிற்சி மையத்தில் இந்த ஏற்பாட்டை செய்ய வேண்டும் என்று அதன் பொதுச் செயலாளர் சஹ்தேவ் யாதவ் தெரிவித்துள்ளார்.
அடுத்த மாதம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெறும். மீராபாய் சானு உலக சாம்பியன். எனவே மத்திய விளையாட்டு அமைச்சகம் இதில் எந்த விஷப்பரிட்சையும் மேற்கொள்ளாது என பயிற்சியாளர் விஜய் சர்மா தெரிவித்தார். தாய்லாந்தில் 3 வாரங்கள் இந்திய வீரர்கள் பயிற்சி செய்ய உள்ளனர்.
