FIFA world cup football on June 15 th opening russia
11-வது உலகக் கோப்பை கால்பந்து தொடர் வரும் ஜூன் 14-ஆம் தேதி முதல் ஜூலை 15-ஆம் தேதி வரை ரஷ்யாவில் நடைபெறுகிறது.மொத்தம் 32 அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடர் ரஷ்யாவின் 11 முக்கிய நகரங்களில் உள்ள 12 பிரம்மாண்டமான மைதானங்களில் போட்டியை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ரஷ்யாவில் கால்பந்து மைதானங்கள் குறைவாகவே உள்ளதால் புதின் அரசு 80 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் புதிதாக 9 மைதானங்களைக் கட்டியுள்ளது. இதையடுத்து அடுத்த 13 நாட்களில் தொடங்கும் கால்பந்து திருவிழவைக் காண கோடான கோடி கண்கள் காத்திருக்கின்றன.

ரஷ்யாவில் நடைபெறும் இந்த உலகக்கோப்பை தொடரில் கோப்பையை வெல்லும் என அனைத்துத் தரப்பு மக்களும் அதிகம் எதிர்பார்க்கும் அணி அர்ஜெண்டினா அணிதான்.
ஆனால் எங்கள் அணியில் உள்ள வீரர்களை விட வேறு சில அணிகளிலேயே மிகச்சிறந்த வீரர்கள் அதிகம் உள்ளனர் என அந்த அணியின் நட்சத்திர வீரர் மெஸ்ஸி விரக்தியுடன் கூறியுள்ளார்.

மெஸ்ஸியின் கருத்தால் அதிர்ச்சியடைந்த அர்ஜெண்டினா அணி ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தங்களது கருத்துக்களால் மெஸ்ஸியை வறுத்தெடுத்து வருகின்றனர். அர்ஜெண்டினா அணிதான் உலகக்கோப்பையை வெல்லும் எனக் கால்பந்து உலகமே கணிக்கப்பட்ட நிலையில் அந்த அணியில் சில சர்ச்சைகள்,பல கேள்விகள் என பல்வேறு குறைகள் உள்ளன.
அர்ஜெண்டினா பயிற்சியாளர் சம்போலி அறிவித்துள்ள வீரர்கள் பட்டியலில் நட்சத்திர வீரர் மவ்ரோ இகார்டி பெயர் இடம்பெறவில்லை. சீரி ஏ கால்பந்து தொடரில் இண்டர் மிலன் அணிக்காக 29 கோல்களை அடித்த இகார்டியை அர்ஜெண்ட்டைனா அணியில் இருந்து நீக்கியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

கடந்த ஓராண்டாக எவ்வித சர்வதேச தொடர்களில் பங்கேற்காமலே வீட்டிற்குள்ளேயே முடங்கி இருந்த கோல் கீப்பர் பிராங்கோ அர்மனி அணியில் இடம்பிடித்துள்ளார். கடந்த உலகக்கோப்பை தொடரின் இறுதி போட்டியில் சொதப்பிய 8 வீரர்கள் நடப்பு உலகக்கோப்பை தொடரிலும் களமிறங்குகின்றனர் என பல குறைகள் அர்ஜெண்ட்டைனா அணியில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உலகக்கோப்பை தொடருக்கு செல்லும் அணியில் சிறந்த அணி அர்ஜெண்டினா என்பதை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.எங்கள் அணியை விட வேறு சில அணியில் மிகச்சிறந்த வீரர்கள் அதிகம் உள்ளனர். அர்ஜெண்டினா சிறந்தது அல்ல என்பதை உலகக்கோப்பை தொடர் தொடங்கும் முன்பாகவே மக்கள் உணரவேண்டும்.ஆனாலும் ரஷ்ய உலகக்கோப்பை தொடரில் சாதிப்போம் என்ற நம்பிக்கை உள்ளது என நட்சத்திர வீரர் மெஸ்ஸி தெரிவித்துள்ளார்.
