ஏடிபி டென்னிஸ் தரவரிசையில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் எட்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியதன் மூலம் தரவரிசையில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளார் ஃபெடரர். அவர் இரு இடங்கள் முன்னேறி தற்போது மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளார்.

பிரிட்டனின் ஆன்டி முர்ரே தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். ஸ்பெயினின் ரஃபேல் நடால் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.

விம்பிள்டனில் முர்ரே காலிறுதியோடும், நடால் 4-வது சுற்றோடும் வெளியேறினர். எனினும் அவர்களின் தரவரிசையில் எந்த பின்னடைவும் இல்லை.

செர்பியாவின் நோவக் ஜோகோவிச் நான்காவது இடத்திலும், ஸ்விட்சர்லாந்தின் ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்கா ஐந்தாவது இடத்திலும், விம்பிள்டனில் இறுதிச் சுற்று வரை முன்னேறிய குரோஷியாவின் மரின் சிலிச் ஆறாவது இடத்திலும் உள்ளனர்.

அதேபோன்று இந்திய வீரர் ராம்குமார் 16 இடங்கள் முன்னேறி 168-வது இடத்தைப் பிடித்துள்ளார். இது அவருடைய அதிகபட்ச தரவரிசையாகும்.

இந்திய வீரர்கள் யூகி பாம்ப்ரி 212-வது இடத்திலும், பிரஜ்னேஷ் குன்னேஸ்வரன் 214-வது இடத்திலும், ஸ்ரீராம் பாலாஜி 293-வது இடத்திலும் உள்ளனர்.