Federation Cup the two teams went away

ஃபெடரேஷன் கோப்பைக்கான தேசிய அளவிலான கூடைப்பந்துப் போட்டியின் மகளிர் பிரிவில் சத்தீஸ்கர் அணியும், ஆடவர் பிரிவில் ஓ.என்.ஜி.சி. அணியும் சாம்பியன் தட்டிச் சென்றன.

31-ஆவது தேசிய கூடைப்பந்துப் போட்டிகள், தமிழ்நாடு கூடைப்பந்துக் கழகம், அரைஸ் அறக்கட்டளை, கோவை மாவட்ட கூடைப்பந்துக் கழகம், பி.எஸ்.ஜி. ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் ஃபெடரேஷன் கோப்பைக்கான தேசிய அளவிலான கூடைப்பந்துப் போட்டி கோவையில் கடந்த 22-ஆம் தேதி தொடங்கியது.

கடைசி நாளான நேற்று மாலை நடைபெற்ற மகளிர் இறுதி ஆட்டத்தில் சத்தீஸ்கர் அணி 77 - 67 என்ற புள்ளிகள் கணக்கில் தெற்கு ரயில்வே அணியை வீழ்த்தியது.

மகளிர் பிரிவு மூன்றாவது இடத்துக்கான ஆட்டத்தில், மேற்கு வங்க அணி 81 - 52 என்ற புள்ளிகள் கணக்கில் தமிழக அணியைத் தேற்கடித்தது.

அதேபோன்று, ஆடவர் பிரிவு இறுதி ஆட்டத்தில் டேராடூன் ஓ.என்.ஜி.சி. அணி 55 - 52 என்ற புள்ளிகள் கணக்கில் சென்னை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணியை வீழ்த்தியது.

ஆடவர் பிரிவு மூன்றாவது இடத்துக்கான ஆட்டத்தில், இந்திய விமானப் படை அணி 85 - 79 என்ற புள்ளிகள் கணக்கில் பெங்களூர் ராணுவ அணியைத் தோற்கடித்தது.

வெற்றி பெற்ற அணிகளுக்கு வருமான வரித் துறை ஆணையர் பி.செல்வகணேஷ் கோப்பைகளை வழங்கினார்.

போட்டி ஏற்பாட்டு குழுத் தலைவர் ஆதவ் அர்ஜுன், இந்திய கூடைப்பந்துக் கழக பொதுச் செயலாளர் சந்தர் முகி சர்மா, தமிழ்நாடு கூடைப்பந்துக் கழகத் தலைவர் வி.வி.ஆர்.ராஜ் சத்யன், முதுநிலை துணைத் தலைவர் செந்தில் தியாகராஜன் உள்ளிட்ட பலர் இந்த விழாவில் பங்கேற்றனர்.