தோனிக்கு கேரளாவில் 35 அடி உயரத்தில் ரசிகர்கள் கட் அவுட் வைத்துள்ளனர். 

இந்திய அணிக்கு ஒருநாள் உலக கோப்பை, டி20 உலக கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி ஆகிய மூன்றுவிதமான சர்வதேச கோப்பைகளையும் வென்று கொடுத்து இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டனாக திகழ்ந்தவர் தோனி. 

கேப்டன்சியில் இருந்து விலகி தற்போது அணியில் ஒரு வீரராக ஆடிவருகிறார். அதிரடியாக ஆடி, சிறந்த ஃபினிஷர் என்று பெயர்பெற்ற தோனி, இன்று ஃபார்மில் இல்லாததால் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளார். அணியில் அவரது இருப்பு குறித்த விமர்சனங்கள் கடுமையாக எழுந்துள்ளன. 

எனினும் தோனியின் அனுபவ ஆலோசனையும் அவரது விக்கெட் கீப்பிங்கும் இந்திய அணிக்கு தேவை என்பதால் அடுத்த ஆண்டு நடக்க உள்ள உலக கோப்பை வரை கண்டிப்பாக ஆடுவார். தோனி எப்போது வேண்டுமானாலும் ஃபார்முக்கு வந்துவிடுவார் என்று முன்னாள் ஜாம்பவான்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர். இதற்கிடையே வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரிலிருந்து தோனி நீக்கப்பட்டது, அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தது. தோனியை ஓரங்கட்டும் முயற்சியாகவே ரசிகர்களால் பார்க்கப்படுகிறது. 

இதனால் அதிருப்தியில் இருந்த தோனி ரசிகர்கள், கேரளாவில் கட் அவுட் எல்லாம் வைத்து அதகளப்படுத்தியுள்ளனர். பொதுவாக சினிமா நடிகர்களுக்கு கட் அவுட் வைப்பதைத்தான் ரசிகர்கள் வழக்கமாக வைத்திருந்தனர். அதிலும் தமிழ்நாடு, ஆந்திராவைப்போல அல்ல கேரளா. அங்கு நடிகர்கள் மீதான வழிபாடெல்லாம் கிடையாது. தமிழ்நாடு, ஆந்திரா அளவிற்கு நடிகர்களை வழிபடமாட்டார்கள். ஆனால் நடிகர்களையே மிஞ்சும் அளவிற்கு கேரளாவில் தோனிக்கு கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது. 

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன்ஃபீல்டு மைதானத்தில் இன்று நடக்கிறது. இதையொட்டி தோனிக்கு அவரது ரசிகர்கள், மைதானத்திற்கு வெளியே 35 அடி உயரத்தில் கட் அவுட் ஒன்றை வைத்துள்ளனர். 

கட் அவுட் தயார் செய்யும் வீடியோவை சிஎஸ்கே அணி, அதன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு மகிழ்ந்துள்ளது.