வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் மைதானத்திற்குள் ரசிகர் ஒருவர் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.  

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் மைதானத்திற்குள் ரசிகர் ஒருவர் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இதையடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டி ஹைதராபாத்தில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. உணவு இடைவேளைக்கு முன்னதாகவே 3 விக்கெட்டுகளை இழந்தது வெஸ்ட் இண்டீஸ் அணி.

உணவு இடைவேளை முடிந்து வந்ததும் ஹெட்மயரை வீழ்த்தினார் குல்தீப் யாதவ். 4 விக்கெட்டுகளை இழந்து வெஸ்ட் இண்டீஸ் அணி ஆடிவருகிறது. இந்த போட்டியிலும் இந்திய பவுலர்கள் ஆதிக்கம் செலுத்திவருகின்றனர். 

இன்றைய முதல் நாள் ஆட்டத்தின்போது, 15வது ஓவரை குல்தீப் யாதவ் வீசினார். அந்த ஓவர் முடிந்ததும் மைதானத்திற்குள் புகுந்த ரசிகர் ஒருவர், ஷார்ட் மிட் ஆன் திசையில் ஃபீல்டிங் செய்துகொண்டிருந்த கேப்டன் விராட் கோலியை நோக்கி ஓடிவந்து, அவரை கட்டிப்பிடித்து அவருடன் செல்ஃபி எடுத்தார். ரசிகர் மைதானத்திற்குள் ஓடிவந்ததால் பரபரப்பு நிலவியது. 

பின்னர், மைதானத்தில் பணியில் இருந்த காவலர்கள் அந்த ரசிகரை மைதானத்தை விட்டு வெளியேற்றினர். 

ராஜ்கோட்டில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தின் போதும் இதேமாதிரியான சம்பவம் நடந்தது. மைதானத்திற்குள் ஓடிவந்த 2 ரசிகர்கள், பேட்டிங் செய்துகொண்டிருந்த கோலியுடன் செல்ஃபி எடுத்தனர். 

View post on Instagram