நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் போன்ற பிரபலங்களை வழிபடும் அளவிற்கான தீவிர ரசிகர்கள் இருந்துகொண்டே தான் இருக்கிறார்கள்.

தங்களது ஆஸ்தான பிரபலங்களிடமிருந்து நல்ல விஷயங்களை பின்பற்றலாம். ஆனால் சம வயதுடைய அவர்களின் கால்களில் விழுவது, வழிபடுவது போன்ற செயல்கள் எல்லாமே அபத்தங்கள். இதுபோன்ற அபத்தங்கள் இன்னும் நடந்துகொண்டே தான் இருக்கின்றன.

சில இளைஞர்கள் இன்னும் இதுபோன்ற செயல்களை கண்மூடித்தனமாக செய்துகொண்டிருக்கிறார்கள். மைதானத்திற்குள் புகுந்து தங்களது ஆஸ்தான கிரிக்கெட் வீரர்களின் கால்களில் விழும் செயல்கள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன.

அவர்களது காலில் ஏன் விழவேண்டும்? என்ற சிந்தனை இல்லாமல் சிலர் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். விஜய் ஹசாரே தொடரின் நாக் அவுட் சுற்று போட்டிகளில் மும்பை அணிக்காக ரோஹித் சர்மா ஆடிவருகிறார். 

நேற்று பெங்களூருவில் நடந்த காலிறுதி போட்டி ஒன்றில் மும்பை அணியும் பீகார் அணியும் மோதின. இந்த போட்டியில் மும்பை அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த போட்டியில் மும்பை அணியின்  தொடக்க வீரராக ரோஹித் சர்மா களமிறங்கி ஆடிக்கொண்டிருந்தபோது, மைதானத்திற்குள் புகுந்த ரசிகர் ஒருவர் ரோஹித் சர்மாவின் காலில் விழுந்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதுபோன்ற பல சம்பவங்கள் நடந்துள்ளன. தோனி, காம்பீர், விராட் கோலி போன்ற வீரர்களின் காலில் ரசிகர்கள் விழுந்த சம்பவங்களும் அரங்கேறியுள்ளன. ஆஸ்தான வீரர்களை ரசித்துவிட்டு போவதை விடுத்து, தங்களது சுயத்தை விட்டுவிட்டு இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதை ரசிகர்கள் தவிர்ப்பது நல்லது.