Asianet News TamilAsianet News Tamil

அறிமுக போட்டியில் சதத்தை தவறவிட்ட ஃபகார் ஜமான்!! கேப்டனுக்கும் சதம் மிஸ் ஆயிடுச்சு.. சரிவிலிருந்து மீண்டு மீண்டும் சரிந்த பாகிஸ்தான்

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அறிமுகமான பாகிஸ்தான் வீரர் ஃபகார் ஜமான், அறிமுக போட்டியிலேயே சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். 
 

fakhar zaman missed century in debut match
Author
Abu Dhabi - United Arab Emirates, First Published Oct 16, 2018, 5:37 PM IST

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அறிமுகமான பாகிஸ்தான் வீரர் ஃபகார் ஜமான், அறிமுக போட்டியிலேயே சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். 

ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவருகிறது. துபாயில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜாவின் பொறுப்பான சதத்தால் போட்டி டிராவில் முடிந்தது. 

இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி அபுதாபியில் இன்று தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. அந்த அணியின் தொடக்க வீரர் இமாம் உல் ஹக் காயத்தால் தொடரிலிருந்து விலகியுள்ளதால், ஃபகார் ஜமான் இந்த போட்டியின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார்.

கடந்த போட்டியில் சதமடித்த முகமது ஹஃபீஸ், இந்த போட்டியில் வெறும் 4 ரன்களுக்கு ஸ்டார்க்கி பவுலிங்கில் அவுட்டாகி நடையை கட்டினார். இதையடுத்து அசார் அலி 15 ரன்களுக்கு ஆஸ்திரேலிய ஸ்பின்னர் நாதன் லயனின் பவுலிங்கில் அவுட்டானார். அவரைத் தொடர்ந்து சோஹைல், ஆசாத் ஷாஃபிக் மற்றும் பாபர் அசாம் ஆகிய மூவரும் ரன் ஏதும் எடுக்காமல் நாதன் லயனின் பவுலிங்கில் டக் அவுட்டாகி வெளியேறினர்.

fakhar zaman missed century in debut match

பாகிஸ்தான் அணி 57 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்தது. ஃபகார் ஜமானுடன் அந்த அணியின் கேப்டன் சர்ஃப்ராஸ் அகமது ஜோடி சேர்ந்து அணியை மீட்டெடுத்தார். ஒருமுனையில் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறுமுனையில் பொறுப்பாகவும் நிதானமாகவும் ஆடிய ஃபகார் ஜமான், அரைசதம் கடந்தார். 

அறிமுக போட்டியிலேயே சிறப்பாக ஆடிய ஃபகார் ஜமான் 94 ரன்களுக்கு ஆட்டமிழந்து சதமடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார். எனினும் அவரது இன்னிங்ஸ் மிக முக்கியமானது. பாகிஸ்தான் அணி சரிவிலிருந்த நிலையில், இவர் சிறப்பாக ஆடி ரன்களை சேர்த்தார். சரிவிலிருந்து பாகிஸ்தான் அணி மீண்டுவந்த நிலையில், ஃபகார் ஜமான் விக்கெட்டை பறிகொடுத்தார். 

fakhar zaman missed century in debut match

ஃபகார்-சர்ஃப்ராஸ் ஜோடி 6வது விக்கெட்டுக்கு 147 ரன்கள் சேர்த்தது. களமிறங்கியது முதலே அதிரடியாக ஆடிய கேப்டன் சர்ஃப்ராஸ், தொடர்ந்து சிறப்பாக ஆடி சதத்தை நெருங்கினார். ஆனால் அவரும் 94 ரன்களுக்கு அவுட்டாகி சதத்தை தவறவிட்டார். இதையடுத்து சரிவிலிருந்து மீண்ட பாகிஸ்தான் அணி மீண்டும் சரிவை சந்தித்துள்ளது. 8 விக்கெட்டுகளை பாகிஸ்தான் அணி இழந்துவிட்டது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios