ஆசிய விளையாட்டுப் போட்டியில் கலக்கிய பேட்மின்டன் வீரர்களுடன் ஏசியாநெட் நியூஸ் சிறப்பு நேர்காணல்!!
ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற பேட்மின்டன் வீரர்களுடன் ஏசியாநெட் நியூஸ் எக்சிகியூட்டிவ் சேர்மன் ராஜேஷ் கல்ரா அவர்களின் சிறப்பு நேர்காணல்.
அண்மையில் நடந்துமுடிந்த 2023ஆம் ஆண்டுக்கான ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துள்ள இந்திய பேட்மின்டன் வீரர்கள் ஏசியாநெட்டுக்கு பிரத்யேகமாக பேட்டி அளித்துள்ளனர். ஏசியாநெட் நியூஸ் எக்சிகியூட்டிவ் சேர்மன் ராஜேஷ் கல்ரா அவர்களுடன் உரையாடி இருக்கிறார்.
தனிநபர் பிரிவில் 41ஆண்டுகளுக்குப் பின் வெண்கலம் வென்று பெருமை சேர்த்திருக்கும் ஹெச். எஸ். பிரனாய், உலகின் நம்பர் ஒன் ஜோடியாக உருவெடுத்துள்ள சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஆகியோருடன் இந்திய பேட்மின்டன் குழுவுக்கான தலைமைப் பயிற்சியாளர் புல்லேலா கோபிசந்த்தும் தனது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.
ராஜேஷ் கல்ரா: முதலில் பிரனாய், இப்போது உங்களை எதிர்த்து விளையாட யாருமே விரும்பமாட்டார்கள். கிட்டத்தட்ட அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று வருகிறீர்கள். இந்த முன்னேற்றம் பற்றிச் சொல்லுங்கள்.
பிரனாய்: கடந்த இரண்டு ஆண்டுகளில் பல மாற்றங்கள் நடந்துவிட்டன. குறிப்பாக, பயிற்சிகளில் கூடுதல் மகிழ்ச்சியுடன் ஈடுபடுவதைச் சொல்லாம். அடுத்து வரும் போட்டிகள் குறிந்த யோசனைகளை விட்டுவிட்டு பயிற்சியில் மகிழ்ச்சியாக ஈடுபட முடிவது என்னிடம் தனிப்பட்ட முறையில் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது என நினைக்கிறேன். இப்போது தினமும் காலையில் எழுந்தவுடன் பயிற்சிக்குச் செல்வதையே விரும்புகிறேன்.
ராஜேஷ்: அதைத் தவிர உங்கள் ஆட்டத்தில் வேறு ஏதாவது மாற்றம் செய்திருக்கிறீர்களா?
பிரனாய்: சிறிது கால இடைவெளிக்குப் பிறகு, கடந்த 2 ஆண்டுகளாக பையாவுடன் (பயிற்சியாளர் கோபிசந்த்) தொடர்ந்து பயிற்சியில் ஈடுபடுவதை சொல்வேன். அப்போதுதான் பல விஷயங்கள் சரியான நிலைக்கு வந்ததாக கூறலாம். நாங்கள் நிறைய உரையாடி இருக்கிறோம். விளையாட்டில் உடல் தகுதியைப் பேணுவது எவ்வளவு முக்கியம், போட்டிக்கும் பயிற்சிக்கும் உடல் தகுதியுடன் தயாராக இருப்பது எப்படி என்பதை எல்லாம் பேசியிருக்கிறோம். அது கை கொடுத்திருக்கிறது என நம்புகிறேன்.
ராஜேஷ்: ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் கூட உங்களுக்கு முதுகுவலி இருந்தபோதும் அதைச் சமாளித்து சிறப்பாக விளையாடியதைப் பார்க்க முடிந்தது. அதைப்பற்றிச் சொல்லுங்கள்.
பிரனாய்: இளம் வயதில் நிறைய காயம் அடைந்திருக்கிறேன். குறிப்பாக, 22 முதல் 27 வயதில் நிறைய பாடங்களைக் கற்றுக்கொண்டேன். அவை அனைத்தும் 30 வயதைத் தாண்டிய பிறகு எனக்கு பயன்படுகிறது. இதுவும் விளையாட்டின் ஒரு பகுதிதான் என்று எடுத்துக்கொள்ள வேண்டும்.
ராஜேஷ்: சிராக் உங்களுக்கும் கூட அரையிறுதிப் போட்டிக்கு முன்பு உடல் நலைக்குறைவு ஏற்பட்டிருந்ததா?
சிராக்: முதல் போட்டிக்குப் பின் ஒருநாள் ஓய்வு இருந்தது. அப்போது எங்கள் அணியைச் சேர்ந்த ரோஹன் கபூரிடம்தான் முதலில் கூறினேன். அப்போது எனக்கு தொண்டையில் சிறு பிரச்சினை ஏற்பட்டிருந்தது. ஆனால், நல்ல வேளையாக மறுநாள் ஓய்வு நாளாக அமைந்தது. அதனால், குறைந்தது ஒருநாள் ஓய்வு எடுத்துக்கொண்டு மறுநாள் போட்டிக்குத் தயாராக இருக்க முடிந்தது. அது எப்படியோ சரியாகிவிட்டது.
ராஜேஷ்: சாத்விக், உங்களுடன் விளையாடும் வீரருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டடிருப்பது தெரிந்ததும் எப்படி இருந்தது. நீங்கள் அப்போது என்ன செய்தீர்கள் என்று சொல்லுங்கள்.
சாத்விக்: உண்மையில் அவருக்கு என்ன நேர்ந்தது என்று நன்றாகத் தெரியவில்லை. அப்போது நாங்கள் வேறு அறைக்கு மாற்றிக்கொண்டிருந்தோம். எனக்கும் ஏதாவது பாதிப்பு வந்து விடக்கூடாது என்பதால் அதில்தான் நான் கவனம் செலுத்தினேன். எப்படியும் அவர் போட்டிக்குத் தயாராக வந்துவிடுவார் என்ற நம்பிக்கை இருந்தது. சிராக் சொன்னதுபோல ஒருநாள் இடைவெளி இருந்ததால் அதுவும் பயன்பட்டது.
ராஜேஷ்: உங்கள் இரண்டு பேருக்கும் இடையே உள்ள ரகசியம் என்ன என்று சொல்லுங்கள். நீங்கள் விளையாடும் ஷாட்கள் பல பார்ப்பதற்கே ஆச்சரியமாக இருக்கிறது. இருவருக்கும் பரஸ்பரம் மற்றவர்கள் மீதும் ஆட்டத்தின் மீதும் உள்ள புரிதலைப் பார்க்க முடிகிறது. அது எப்படி சாத்தியமானது?
சிராக்: களத்தில் மட்டுமின்றி ஆட்டத்திற்குப் பிறகும் நல்ல நட்பில் இருக்கிறோம். அதுதான் காரணம். எனக்கு அந்தப் பிணைப்பு உள்ளது. இருவருக்குமே இருக்கிறது.
ராஜேஷ்: ஏதாவது ஒரு போட்டியில் இருவரில் ஒருவர் சிறப்பாக விளையாடவில்லை என்றால் அதைப்பற்றி அதிருப்தி ஏற்படுவது உண்டா?
சிராக்: ஆசிய விளையாட்டுப் போட்டிகளில்கூட அரையிறுதியில் சாத்விக் ஆரம்பத்தில் அவரது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இறுதிப்போட்டியில் நான் சிறப்பான தொடக்கம் கொடுக்கவில்லை. ஆனால், அரையிறுதி நான் அவரை ஊக்கப்படுத்தினேன். இறுதிப்போட்டியில் அவர் என்னை ஊக்கப்படுத்தினார். இப்படி இருப்பதுதான் பார்ட்னர்ஷிப் என்று நினைக்கிறேன். ஒருவர் சற்று சறுக்கும்போது அவருக்கு ஆதரவாக இருக்கவேண்டும். அதன் மூலம் இருவருக்கும் நம்பிக்கை ஏற்படும்.
ராஜேஷ்: உங்களிடம் பயிற்சி பெறும் அனைவரிடம் இந்த நம்பிக்கையை எப்படி உருவாக்குகிறீர்கள். ஏனென்றால் நீங்களே ஒரு பேட்மின்டன் வீரராக விளையாடி இருக்கிறீர்கள். அதது எப்படி நடக்கிறது என்று கூறுங்கள்.
கோபிசந்த்: களத்தில் வெற்றிகரமாக செயல்படுவதற்குப் பின்னால் ஒரு டீம் ஒர்க் இருக்கிறது. மேலும் தங்களுக்குத் தெரிந்த விதமான ஆட்டத்தைத் தவிர்த்து வேறு விதமாக விளையாடி வெற்றி பெறும்போது உற்சாகம் ஏற்படுகிறது. இதற்கெல்லாம் மேல் ஒவ்வொருவருக்கு இடையிலும் இருக்கும் புரிந்துணர்வும் பிணைப்பும் நம்பிக்கையை அவர்களுக்குக் கொடுக்கிறது.
ராஜேஷ்: இந்த மூன்று பேரில் யாருக்கு எதிராக விளையாடுவது கடினம் என்று சொல்வீர்கள்.
கோபிசந்த்: உண்மையில் மூன்று பேருமே அவர்கள் ஆட்டத்தில் சிறப்பான வீரர்கள்தான். விளையாட்டுத் திறனிலும் சரி, தனிப்பட்ட அளவிலும் சரி அவர்கள் சிறந்தவர்கள்தான். இந்திய பேட்மின்டனுக்கு இவர்களைவிடச் சிறந்த சாம்பியன் வீரர்கள்கள் கிடைக்க மாட்டார்கள்.