Even the best football players in Indian schools are emerging - Maradona congratulates ...
இந்திய பள்ளிகளில் கூட மிகச் சிறந்த கால்பந்து வீரர்கள் உருவாகி வருகின்றனர் என்று அர்ஜென்டீனா அணியின் முன்னாள் வீரர் மரடோனா தெரிவித்துள்ளார்.
தனிப்பட்ட முறையில் மூன்று நாள் பயணமாக திங்கள்கிழமை இந்தியா வந்தார் மரடோனா (57).
மேற்கு வங்க மாநிலம், பரசாத் நகரில் உள்ள தனியார் விளையாட்டு அகாடெமி சார்பில் நேற்று கால்பந்து பயிற்சி பட்டறை ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதில் மரடோனா கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இந்தப் பயிற்சி பட்டறையில் 60 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். தனித்தனி குழுவாக பிரிந்திருந்த அவர்களுடன் மரடோனா இணைந்து விளையாடி ஊக்கம் அளித்தார். மேலும், அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.
அதன்பின்னர், செய்தியாளர்களிடம் மரடோனா கூறியது: "கால்பந்துக்காக இன்று நான் இங்கு இருக்கிறேன். திரிணாமூல் காங்கிரசு எம்எல்ஏ சுஜித் போஸ் உள்ளிட்டோர் என்னை இங்கு அழைத்து வந்தனர்.
இந்தியாவில் மிகச் சிறந்த கால்பந்து வீரர்கள் உள்ளனர். பள்ளிகளிலும் சிறந்த வீரர்கள் உருவாகி வருகின்றனர்.
இந்தியாவுக்கு கால்பந்து தேவை என்பது போன்ற கருத்துகளை இனியும் கூற வேண்டிய அவசியமில்லை என்று கருதுகிறேன். ஏனென்றால் கால்பந்து இந்நாட்டில் பிரபலமடைந்து வருகிறது.
இந்தியர்கள் என்னை வரவேற்ற விதத்தைக் கண்டு நெகிழ்ச்சி அடைந்தேன். அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி" என்று அவர் தெரிவித்தார்.
