ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 36-ஆவது லீக் ஆட்டத்தில் விக்கெட் இழப்பின்றி டெல்லி டேர்டெவில்ஸ்க்க்கு தண்ணீர் காட்டியது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 36-ஆவது லீக் ஆட்டம் மொஹாலியில் நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் டெல்லி அணியின் கேப்டன் ஜாகீர்கான் காயம் காரணமாக இடம் பெறததால் அந்த அணி கருண் நாயர் தலைமையில் களமிறங்கியது.

இதில் டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் மேக்ஸ்வெல் பீல்டிங்கை தேர்வு செய்தார்.

இதையடுத்து பேட் செய்த டெல்லி அணி, சந்தீப் சர்மா வீசிய முதல் ஓவரில் சாம் பில்லிங்ஸின் ரன் ஏதுமின்றி விக்கெட்டை இழந்த நொடி அந்த அணியின் சரிவு தொடங்கியது.

இதன்பிறகு 3-ஆவது ஓவரை வீசிய சந்தீப் சர்மா, அதில் சஞ்ஜு சாம்சனை 5 ஓட்டங்களில் வீழ்த்தினார்.

பின்னர் ஷ்ரேயஸ் ஐயர் 6 ஓட்டங்கள் எடுத்த நிலையில் சந்தீப் சர்மா பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் ஆனார்.

பின்னர் கேப்டன் கருண் நாயர் 11, ரிஷப் பந்த் 3, கிறிஸ் மோரீஸ் 2 என அடுத்தடுத்து வெளியேற, 8.4 ஓவர்களில் 33 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது டெல்லி.

பிறகு கோரே ஆண்டர்சன் 18, காகிசோ ரபாடா 11, முகமது சமி 2 ஓட்டங்களிலும், ஷாபாஸ் நதீம் ரன் ஏதுமின்றியும் ஆட்டமிழக்க, டெல்லி அணி 17.1 ஓவர்களில் 67 ஓட்டங்களுக்கு மொத்தமாக சுருண்டது.

பஞ்சாப் தரப்பில் சந்தீப் சர்மா 4 விக்கெட்டுகளையும், வருண் ஆரோன் 2 விக்கெட்டுகளையும், அக்ஷர் படேல் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர்.

பின்னர் பேட் செய்த பஞ்சாப் அணியில் ஹஷிம் ஆம்லா நிதானம் காட்ட, மார்ட்டின் கப்டில் முதல் ஓவரிலேயே இரு பவுண்டரிகளை விரட்டி அதிரடியில் இறங்கினார்.

அதனைத் தொடர்ந்து சிக்ஸரையும், பவுண்டரியையும் விரட்டிய கப்டில் 27 பந்துகளில் அரை சதமடிக்க, 7.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 68 ஓட்டங்கள் எடுத்து வெற்றி கண்டது பஞ்சாப்.

கப்டில் 50 ஓட்டங்களும், ஆம்லா 16 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

சந்தீப் சர்மா ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

இதுவரை 9 ஆட்டங்களில் விளையாடியுள்ள பஞ்சாப் அணி 4-ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது.

அதேநேரத்தில் டெல்லி அணி 8-ஆவது ஆட்டத்தில் விளையாடி 6-ஆவது தோல்வியை சந்தித்துள்ளது.