இந்தியா-இங்கிலாந்து இடையிலான 5-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னையில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.
கடந்த 4 போட்டிகளில் மூன்றை வென்றதன் மூலம் ஏற்கெனவே தொடரைக் கைப்பற்றிவிட்ட இந்திய அணி, இந்தப் போட்டியிலும் இங்கிலாந்தை வீழ்த்தி வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் களமிறங்குகிறது. 1992-93-இல் அசாருதீன் தலைமையிலான இந்திய அணி 3-0 என்ற கணக்கில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியதே இன்றளவும் சாதனையாக உள்ளது.
இந்தத் தொடரின் முதல் போட்டியில் டிரா செய்த இந்திய அணி, அதன்பிறகு விளையாடிய 3 போட்டிகளிலும் வெற்றி கண்டுள்ளது. மும்பையில் நடைபெற்ற 4-ஆவது டெஸ்டில் இன்னிங்ஸ் வெற்றியைப் பெற்ற உற்சாகத்தில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது கோலி படை.
இந்திய அணி பேட்டிங், பெளலிங் என இரண்டிலும் வலுவாக உள்ளது. தொடக்க வீரர்களில் ஒருவரான முரளி விஜய், இந்தத் தொடரில் இதுவரை இரு சதங்களை விளாசியுள்ளார். சென்னையைச் சேர்ந்தவரான விஜய் சொந்த மண்ணில் நடைபெறும் 5-ஆவது டெஸ்டில் சிறப்பாக ஆடி ரன் குவிப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
மற்றொரு தொடக்க வீரரான கே.எல்.ராகுல் காயத்திலிருந்து மீண்ட பிறகு பெரிய அளவில் ரன் குவிக்காவிட்டாலும், இந்தப் போட்டியின் மூலம் ஃபார்முக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மிடில் ஆர்டரில் சேதேஷ்வர் புஜாரா, கேப்டன் கோலி ஆகியோர் மிகப்பெரிய பலமாக திகழ்கின்றனர்.
உச்சக்கட்ட ஃபார்மில் இருக்கும் கோலி, இந்தத் தொடரில் இதுவரை 640 ரன்கள் குவித்துள்ளார். மும்பையில் நடைபெற்ற 4-ஆவது டெஸ்டில் இரட்டைச் சதமடித்த கோலி, சென்னை டெஸ்டிலும் இங்கிலாந்து பெளலர்களை பதம்பார்ப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பின்வரிசையில் அஸ்வின், பார்த்திவ் படேல், ரவீந்திர ஜடேஜா, ஜெயந்த் யாதவ் ஆகியோர் பலம் சேர்க்கின்றனர். இவர்கள் 4 பேரும் இக்கட்டான நேரங்களில் சிறப்பாக ஆடி இந்தியா சரிவிலிருந்து மீள்வதற்கு உதவியுள்ளனர். ஜெயந்த் யாதவ், கடந்த போட்டியில் 9-ஆவது வீரராக களமிறங்கி சதமடித்த கையோடு, இந்தப் போட்டியில் களமிறங்குவது குறிப்பிடத்தக்கது.
