உலக கோப்பை நெருங்கிவிட்ட நிலையில், இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய இரு அணிகளில் ஒன்றுதான் கோப்பையை வெல்ல வாய்ப்புள்ளதாக பல முன்னாள் ஜாம்பவான்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தற்போதைய சூழலில் ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் தான் வலுவான நிலையில் உள்ளன. இரு அணிகளுமே ஆக்ரோஷமாக ஆடிவருகின்றன. எதிரணிகளின் மீது ஆதிக்கம் செலுத்தி ஆடி வெற்றிகளை குவித்துவருகின்றன. 

இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிரான ஒருநாள் தொடர்களை தொடர்ந்து வென்றது. வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவரும் இங்கிலாந்து அணி டெஸ்ட் தொடரை 2-1 என இழந்தது. எனினும் முதல் ஒருநாள் போட்டியில் அபார வெற்றியை பெற்று தங்களது வலிமையை நிரூபித்துள்ளது. 

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி, கெய்லின் அதிரடி சதம் மற்றும் கடைசி நேர நர்ஸின் அதிரடியால் 360 ரன்களை குவித்தது. 361 ரன்கள் என்ற கடின இலக்கை, இங்கிலாந்து அணியின் ஜேசன் ராய் மற்றும் ஜோ ரூட்டின் பொறுப்பான சதத்தால் 49வது ஓவரிலேயே எட்டி இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அணி வெற்றிகரமாக விரட்டிய மூன்றாவது பெரிய இலக்கு இதுதான். 

ஏற்கனவே வலுவாக இருக்கும் இங்கிலாந்து அணிக்கு, இந்த மாபெரும் வெற்றி மேலும் உத்வேகத்தை அளித்துள்ளது. இந்த போட்டிக்கு பின்னர் பேசிய இங்கிலாந்து கேப்டன் இயன் மோர்கன், வெஸ்ட் இண்டீஸ் அணி போன வேகத்திற்கு 380-400 ரன்கள் அடிக்கும் நிலை இருந்தது. ஆனால் கடைசி 10 ஓவர்களை எங்கள் பவுலர்கள் கட்டுக்கோப்பாக வீசினர். ஜேசன் ராய் மற்றும் ஜோ ரூட்டின் அபாரமான பேட்டிங்கால் 360 ரன்கள் என்ற 330 என்பதை போன்று ஆனது. போட்டியின் எந்தவொரு சூழலிலும் நாங்கள் நெருக்கடியை உணரவில்லை. எங்களது பேட்டிங் டெப்த் நன்றாக உள்ளது. பின்வரிசை வீரர்கள் வரை பேட்டிங் நன்றாக ஆடுவதால், எவ்வளவு பெரிய இலக்கையும் விரட்ட முடியும் என்று நம்புகிறோம் என்று நம்பிக்கையுடன் பேசினார்.