இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இரண்டு போட்டிகளிலுமே இந்திய அணியின் சொதப்பலான பேட்டிங் தான் தோல்விக்கு காரணம். அதிலும் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இரண்டாவது போட்டியில், இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. 

எனவே இன்று தொடங்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணியில் ஆட உள்ள வீரர்களின் பட்டியல் இதுவரை வெளியிடப்படவில்லை. 

எனினும் இந்திய அணியின் தொடக்க வீரர்களான முரளி விஜய் அல்லது ராகுல் ஆகிய இருவரில் ஒருவர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக தவான் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது. அதேபோல தினேஷ் கார்த்திக்கிற்கு பதிலாக ரிஷப் பண்ட் சேர்க்கப்படலாம் என கருதப்படுகிறது. பும்ரா காயத்திலிருந்து குணமடைந்துவிட்டதால், கண்டிப்பாக அவர் இன்றைய போட்டியில் ஆடுவார். மற்ற வீரர்களில் எந்த மாற்றமும் இருக்காது. 

இங்கிலாந்து அணி ஆடும் லெவனை அறிவித்துவிட்டது. அந்த அணியில் பென் ஸ்டோக்ஸுக்கு பதிலாக இரண்டாவது டெஸ்டில் சேர்க்கப்பட்ட கிறிஸ் வோக்ஸ், பேட்டிங்கில் சதமடித்தார். பவுலிங்கும் நன்றாக வீசினார். எனவே இந்த போட்டியில் பென் ஸ்டோக்ஸ் அணிக்கு மீண்டும் திரும்பிய நிலையில் வோக்ஸும் அணியில் உள்ளார். முந்தைய இரண்டு போட்டிகளிலும் நன்றாக ஆடிய சாம் கரண் இந்த போட்டியில் நீக்கப்பட்டுள்ளார். 

இங்கிலாந்து அணி:

அலெஸ்டர் குக், ஜென்னிங்ஸ், ஜோ ரூட், போப், பேர்ஸ்டோ, ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ், அடில் ரஷீத், ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன்.

இந்திய அணி:(கணிக்கப்பட்ட அணி)

ஷிகர் தவான், முரளி விஜய்/ராகுல், புஜாரா, விராட் கோலி, ரஹானே, ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, அஷ்வின், ஷமி, இஷாந்த் சர்மா, பும்ரா