இந்தியாவுக்கு எதிரான 5-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாளில் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 90 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 284 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
மொயீன் அலி 222 பந்துகளில் 12 பவுண்டரிகளுடன் 120 ஓட்டங்கள் குவித்து களத்தில் உள்ளார். ஜோ ரூட் 144 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் 88 ஓட்டங்கள் குவித்தார். ஜோ ரூட்டுடன் இணைந்து 3-ஆவது விக்கெட்டுக்கு 146 ஓட்டங்கள் குவித்த மொயீன் அலி, ஜானி பேர்ஸ்டோவுடன் இணைந்து 4-ஆவது விக்கெட்டுக்கு 86 ஓட்டங்கள் குவித்தார்.
சென்னையில் வெள்ளிக்கிழமை தொடங்கிய இந்தப் போட்டியில், இந்திய அணியில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. புவனேஸ்வர் குமார், ஜெயந்த் யாதவ் ஆகியோருக்குப் பதிலாக இஷாந்த் சர்மா, அமித் மிஸ்ரா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். கடந்த போட்டியில் 9-ஆவது வீரராக களமிறங்கி சதமடித்த ஜெயந்த் யாதவ், கடைசி நேரத்தில் காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகினார்.
இங்கிலாந்து அணியில், காயமடைந்த ஜேம்ஸ் ஆண்டர்சனுக்குப் பதிலாக லியாம் டெளசன் சேர்க்கப்பட்டுள்ளார். வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் காயத்திலிருந்து குணமடைந்ததைத் தொடர்ந்து இந்தப் போட்டியில் களமிறங்கினார். இதனால் கிறிஸ் வோக்ஸ் நீக்கப்பட்டார்.
டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணியில் கேப்டன் அலாஸ்டர் குக்கும், ஜென்னிங்ஸும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். கடந்த போட்டியில் சதமடித்த ஜென்னிங்ஸ், இதில் 1 ஓட்டம் மட்டுமே எடுத்த நிலையில் இஷாந்த் சர்மா பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் பார்த்திவ் படேலிடம் கேட்ச் ஆனார். இதையடுத்து ஜோ ரூட் களமிறங்க, கேப்டன் குக் 10 ரன்கள் சேர்த்த நிலையில் ஜடேஜா பந்துவீச்சில் ஸ்லிப்பில் நின்ற கேப்டன் கோலியிடம் கேட்ச் ஆனார். அப்போது இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்புக்கு 21 ரன்கள் எடுத்திருந்தது.
இதன்பிறகு ஜோ ரூட்டுடன் இணைந்தார் மொயீன் அலி. இந்த ஜோடி அசத்தலாக ஆட, இங்கிலாந்து அணி சரிவிலிருந்து மீண்டது. தொடர்ந்து சிறப்பாக ஆடிய ஜோ ரூட் 91 பந்துகளில் அரை சதமடிக்க, 38-ஆவது ஓவரில் 100 ஓட்டங்களை எட்டியது இங்கிலாந்து. ஆரம்பத்தில் நிதானமாக ஆடிய மொயீன் அலி, பின்னர் வேகமாக ரன் சேர்க்க ஆரம்பித்தார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய மொயீன் அலி, "டிரிங்க்ஸ்' இடைவேளைக்குப் பிறகு 111 பந்துகளில் அரை சதத்தை எட்டினார். இóந்திய பெளலர்களை தொடர்ந்து சோதித்த இந்த ஜோடி, இங்கிலாந்து அணி 167 ஓட்டங்களை எட்டியபோது பிரிந்தது.
சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஜோ ரூட் 88 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா பந்துவீச்சில் பார்த்திவ் படேலிடம் கேட்ச் ஆனார். ஆனால் நடுவர் அவுட் கொடுக்கவில்லை. இதையடுத்து டிஆர்எஸ் மூலம் மூன்றாவது நடுவரை அணுகினார் கோலி. டி.வி. ரீபிளேயில் ஜோ ரூட் அவுட்டா, இல்லையா என்பதை கண்டறிவது கடினமாக இருந்தது. எனினும் அவருக்கு அவுட் கொடுக்கப்பட்டது. இதனால் விரக்தியோடு வெளியேறினார் ஜோ ரூட். இந்த ஜோடி 3-ஆவது விக்கெட்டுக்கு 146 ஓட்டங்கள் குவித்தது.
இதையடுத்து மொயீன் அலியுடன் ஜோடி சேர்ந்தார் விக்கெட் கீப்பர் ஜானி பேர்ஸ்டோவ். இந்த ஜோடியும் சிறப்பாக ஆட, 68 ஓவர்களில் 200 ஓட்டங்களை எட்டியது இங்கிலாந்து. அசத்தலாக ஆடிய பேர்ஸ்டோவ், ஜடேஜா ஓவரில் இரு சிக்ஸர்களையும், அஸ்வின் ஓவரில் ஒரு சிக்ஸரையும் விளாசி, ஆட்டத்தில் விறுவிறுப்பை ஏற்படுத்தினார்.
தொடர்ந்து சிறப்பாக ஆடிய பேர்ஸ்டோவ், ஒரு ஓட்டத்தில் அரை சதமடிக்கும் வாய்ப்பை நழுவவிட்டார். 90 பந்துகளைச் சந்தித்த அவர் 3 சிக்ஸர்களுடன் 49 ஓட்டங்கள் எடுத்த நிலையில் கே.எல்.ராகுலிடம் கேட்ச் ஆனார். இதையடுத்து களமிறங்கிய பென் ஸ்டோக்ஸ் தடுப்பாட்டம் ஆட, மறுமுனையில் அசத்தலாக ஆடிய மொயீன் அலி 203 பந்துகளில் சதத்தை எட்டினார். இது டெஸ்ட் போட்டியில் அவர் அடித்த 5-ஆவது சதம்.
முதல் நாள் ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி 90 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 284 ஓட்டங்கள் எடுத்துள்ளது. மொயீன் அலி 120, பென் ஸ்டோக்ஸ் 5 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளனர். இந்தியத் தரப்பில் ஜடேஜா 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
