இங்கிலாந்துக்கு எதிரான 5-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 190.4 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 759 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இந்த ஆட்டத்தில் தோல்வியில் இருந்து தப்பிக்க இங்கிலாந்து அணிக்கு 270 ஓட்டங்கள் தேவைப்படுகிறது.

இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான கருண் நாயர் 381 பந்துகளில் 4 சிக்ஸர், 32 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 303 ஓட்டங்கள் குவித்தார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் சேவாக்கிற்கு அடுத்தபடியாக முச்சதம் அடித்த 2-ஆவது இந்தியர் என்ற வரலாற்று சிறப்பைப் படைத்தார். கருண் நாயர் தனது 3-ஆவது போட்டியிலேயே முச்சதம் விளாசியது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 157.2 ஓவர்களில் 477 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக மொயீன் அலி 146, ஜோ ரூட் 88, லியாம் டாசன் ஆட்டமிழக்காமல் 66, ஆதில் ரஷித் 60 ஓட்டங்கள் எடுத்தனர்.

இந்தியத் தரப்பில் ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய அணியில் கே.எல்.ராகுல் 199, பார்த்திவ் படேல் 71 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்க, 3-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் 108 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 391 ஓட்டங்கள் குவித்திருந்தது இந்தியா. கருண் நாயர் 71, விஜய் 17 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தனர்.

4-ஆவது நாளான திங்கள்கிழமை தொடர்ந்து ஆடிய இந்திய அணியில் சிறப்பாக ஆடிய கருண் நாயர் 185 பந்துகளில் தனது முதல் சதத்தைப் பதிவு செய்தார். மறுமுனையில் நிதானமாக ரன் சேர்த்த விஜய் 29 ஓட்டங்கள் சேர்த்த நிலையில் டாசன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து கருண் நாயருடன் இணைந்தார் அஸ்வின். இந்த ஜோடியின் சிறப்பான ஆட்டத்தால், இந்தியா 450 ஓட்டங்களைக் கடந்தது. மொயீன் அலி வீசிய 140-ஆவது ஓவரில் அஸ்வின் சிக்ஸரை விளாச, முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றது இந்தியா. மறுமுனையில் சிறப்பாக ஆடிய கருண் நாயர், மொயீன் அலி வீசிய 144-ஆவது ஓவரில் அடுத்தடுத்து இரு பவுண்டரிகளை விரட்ட, இந்தியா 500 ஓட்டங்களை எட்டியது. இதன்பிறகு கருண் நாயர் 240 பந்துகளில் 150 ஓட்டங்களை எட்டினார்.

நிதானமாக ஆடிய அஸ்வின் "டிரிங்க்ஸ்' இடைவேளைக்குப் பிறகு 116 பந்துகளில் அரை சதம் கண்டார். தேநீர் இடைவேளைக்குப் பிறகு ஜென்னிங்ஸ் வீசிய 167-ஆவது ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி அடித்த கருண் நாயர், 300 பந்துகளில் இரட்டைச் சதத்தை விளாசினார். இதனால் 168 ஓவர்களில் இந்தியா 600 ஓட்டங்களை எட்டியது.

இந்திய அணி 616 ஓட்டங்களை எட்டியபோது பிராட் பந்துவீச்சில் பட்லரிடம் கேட்ச் ஆனார் அஸ்வின். 149 பந்துகளைச் சந்தித்த அஸ்வின் 1 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 67 ஓட்டங்கள் எடுத்தார். அஸ்வின்-நாயர் ஜோடி 6-ஆவது விக்கெட்டுக்கு 181 ஓட்டங்கள் குவித்தது.

இதையடுத்து ஜடேஜா களமிறங்க, மறுமுனையில் நின்ற கருண் நாயர் முச்சதம் அடிக்கும் முனைப்பில் அதிரடியாக ஆடினார். அவர் பிராட் பந்துவீச்சில் ஒரு சிக்ஸரை விளாச, மறுமுனையில் நின்ற ஜடேஜா, ஜேக் பால் பந்துவீச்சில் ஒரு சிக்ஸரையும், ஒரு பவுண்டரியையும் விரட்ட, ரசிகர்களின் ஆரவாரத்தால் மைதானம் அதிர்ந்தது.

தொடர்ந்து வேகமாக ரன் சேர்த்த கருண் நாயர் 348 பந்துகளில் 250 ஓட்டங்களை எட்டினார். மொயீன் அலி வீசிய 184-ஆவது ஓவரில் கருண் நாயர் ஒரு சிக்ஸரை விளாச, அந்த ஓவரில் இந்தியா 700 ஓட்டங்களை எட்டியது. ஆதில் ரஷித் வீசிய அடுத்த ஓவரில் மேலும் ஒரு சிக்ஸரையும், இரு பவுண்டரிகளையும் விரட்டி முச்சதத்தை நெருங்கினார் கருண் நாயர்.
இதனிடையே மறுமுனையில் அசத்தலாக ஆடிய ஜடேஜா 52 பந்துகளில் அரை சதத்தை எட்டினார். இதன்பிறகு சிக்ஸரை விளாச முற்பட்ட ஜடேஜா, பவுண்டரி எல்லை அருகே ஜேக் பாலிடம் கேட்ச் ஆனார். இதையடுத்து உமேஷ் யாதவ் களமிறங்க, மறுமுனையில் கருண் நாயர் 299 ஓட்டங்களை எட்டினார். அவர் முச்சதம் அடிப்பதை முறியடிப்பதற்காக இங்கிலாந்து வீரர்கள் அனைவரையும் அவரை சுற்றி மிக அருகில் நிறுத்தி நெருக்கடி கொடுத்தார் இங்கிலாந்து கேப்டன் குக்.

3-ஆவது நாளில் ராகுல் ஒரு ரன்னில் இரட்டைச் சதத்தை தவறவிட்ட நிலையில், கருண் நாயருக்கு மிக நெருக்கமாக பீல்டர்கள் நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் கருண் நாயர் மிக நேர்த்தியாக பவுண்டரி அடித்து முச்சதத்தை நிறைவு செய்தார். அவர் 381 பந்துகளில் இந்த மைல்கல்லை எட்டினார்.

அப்போது மைதானத்தில் இருந்த அனைத்து ரசிகர்களும் எழுந்து நின்று கரகோஷம் எழுப்பி அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். முன்னதாக, 306 பந்துகளில் இரட்டைச் சதம் அடித்த நாயர், அடுத்த 75 பந்துகளில் முச்சதத்தை எட்டியது குறிப்பிடத்தக்கது.

அதைத் தொடர்ந்து டிக்ளேர் செய்வதாக அறிவித்தார் இந்திய கேப்டன் கோலி. அப்போது இந்தியா 190.4 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 759 ஓட்டங்கள் குவித்திருந்தது.

கருண் நாயர் 303, உமேஷ் யாதவ் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இங்கிலாந்து தரப்பில் ஸ்டூவர்ட் பிராட் 2 விக்கெட் எடுத்தார்.

இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 282 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் 2-ஆவது இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி 4-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் 5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 12 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

அலாஸ்டர் குக் 3, கேதன் ஜென்னிங்ஸ் 9 ஓட்டங்கடன் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து அணி தோல்வியிலிருந்து தப்பிக்க இன்னும் 270 ஓட்டங்கள் எடுக்க வேண்டியுள்ளது.