இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்புக்கு 119 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில், அடுத்த 8 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகளை தொடர்ந்து இழந்தே அதன் தோல்விக்கு காரணம்.

இங்கிலாந்துக்கு எதிரான 3-ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 75 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி கண்டதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.

இந்த ஆட்டத்தில் ரெய்னா 63 ஓட்டங்களும், தோனி 56 ஓட்டங்களும் குவித்தனர். யுவேந்திர சாஹல், பூம்ரா ஆகியோரின் பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாமல் இங்கிலாந்து திணறியது. அந்த அணி ஒரு கட்டத்தில் 2 விக்கெட் இழப்புக்கு 119 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில், அடுத்த 8 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்தது.

சாஹல் 6 விக்கெட்டுகளும், பூம்ரா 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

பெங்களூரில் புதன்கிழமை நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணியில் மணீஷ் பாண்டேவுக்குப் பதிலாக அறிமுக வீரரான ரிஷப் பந்த் சேர்க்கப்பட்டார்.

டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் பீல்டிங்கை தேர்வு செய்ய, கேப்டன் விராட் கோலியும், கே.எல்.ராகுலும் இந்தியாவின் இன்னிங்ஸை தொடங்கினர். 4 பந்துகளைச் சந்தித்த கோலி 2 ஓட்டங்கள் மட்டுமே எடுத்த நிலையில் ரன் அவுட்டானார்.

இதையடுத்து சுரேஷ் ரெய்னா களம்புகுந்தார். அவர், மில்ஸ் பந்துவீச்சில் சிக்ஸரை விளாச, ஆட்டம் சூடுபிடிக்க ஆரம்பித்தது. ஜோர்டான் வீசிய 6-ஆவது ஓவரில் ரெய்னா இரு சிக்ஸளை விரட்ட, மொயீன் அலி வீசிய அடுத்த ஓவரில் ராகுல் ஒரு சிக்ஸரை விளாச, அது மைதானத்துக்கு வெளியே பறந்தது.

தொடர்ந்து வேகமாக ஆட முற்பட்ட ராகுல், 18 பந்துகளில் 22 ஓட்டங்கள் சேர்த்த நிலையில் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் போல்டு ஆனார்.

இதையடுத்து தோனி களமிறங்க, மறுமுனையில் வெளுத்து வாங்கிய ரெய்னா, ஆதில் ரஷித் பந்துவீச்சில் சிக்ஸரை விளாசி 39 பந்துகளில் அரை சதத்தை எட்டினார். ஏறக்குறைய 7 ஆண்டுகளுக்குப் பிறகு சர்வதேச டி20 போட்டியில் அரை சதம் விளாசியுள்ளார் ரெய்னா.

இதையடுத்து அதிரடியில் இறங்கிய தோனியும் சிக்ஸரை பறக்கவிட, ரெய்னா 45 பந்துகளில் 5 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 63 ஓட்டங்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

அப்போது இந்தியா 13.3 ஓவர்களில் 120 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

இதையடுத்து யுவராஜ் சிங் களமிறங்க, மறுமுனையில் அசத்தலாக ஆடிய தோனி 32 பந்துகளில் அரை சதத்தை எட்டினார். சர்வதேச டி20 போட்டியில் அவர் அடித்த முதல் அரை சதம் இதுவாகும்.

இதன்பிறகு அதிரடியில் இறங்கிய யுவராஜ் சிங், ஜோர்டான் வீசிய 18-ஆவது ஓவரில் 3 சிக்ஸர்களையும், ஒரு பவுண்டரியையும் விளாசித் தள்ளினார். தொடர்ந்து வேகம் காட்டிய யுவராஜ் சிங் அடுத்த ஓவரில் ஆட்டமிழந்தார். அவர் 10 பந்துகளில் 27 ஓட்டங்கள் எடுத்தார்.

இதன்பிறகு தோனி 36 பந்துகளில் 2 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 56 ஓட்டங்கள் சேர்த்து வெளியேற, கடைசிப் பந்தில் பாண்டியா (4 பந்துகளில் 11 ஓட்டங்கள்) ரன் அவுட்டானார்.

இறுதியில் இந்தியா 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 202 ஓட்டங்கள் குவித்தது. ரிஷப் பந்த் 6 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். கடைசி 5 ஓவர்களில் இந்தியா 70 ஓட்டங்கள் குவித்தது.

இங்கிலாந்து தரப்பில் மில்ஸ், ஜோர்டான், பிளங்கெட், ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

பின்னர் ஆடிய இங்கிலாந்து அணியில் சாம் பில்லிங்ஸ் டக் அவுட்டாக, ஜேசன் ராயுடன் இணைந்தார் ஜோ ரூட். ஜேசன் ராய் அதிரடியாக ஆட, 6 ஓவர்களில் 55 ஓட்டங்களை எட்டியது இங்கிலாந்து.

மிஸ்ரா வீசிய அடுத்த ஓவரில் தோனியிடம் கேட்ச் ஆனார் ஜேசன் ராய். அவர் 23 பந்துகளில் 32 ஓட்டங்கள் எடுத்தார்.

இதையடுத்து ஜோ ரூட்டுடன் இணைந்தார் கேப்டன் இயான் மோர்கன். இந்த ஜோடி வெளுத்து வாங்கியது. ரெய்னா ஓவரில் மோர்கன் 3 சிக்ஸர்களை விளாச, 12 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 114 ஓட்டங்களை எட்டியது இங்கிலாந்து.

14-ஆவது ஓவரை வீசிய சாஹல், அடுத்தடுத்த பந்துகளில் மோர்கன், ஜோ ரூட் ஆகியோரை வீழ்த்த ஆட்டத்தில் திருப்புமுனை ஏற்பட்டது.

மோர்கன் 21 பந்துகளில் 40 ஓட்டங்களும், ஜோ ரூட் 37 பந்துகளில் 42 ஓட்டங்களும் எடுத்தனர். இந்த ஜோடி 3-ஆவது விக்கெட்டுக்கு 64 ஓட்டங்கள் குவித்தது. எஞ்சிய வீரர்களில் இருவர் ஒற்றை இலக்கத்தில் வெளியேற, மூவர் டக் அவுட்டாகினர்.

இதனால் 16.3 ஓவர்களில் 127 ஓட்டங்களுக்கு சுருண்டது இங்கிலாந்து.

இந்தியத் தரப்பில் யுவேந்திர சாஹல் 4 ஓவர்களில் 25 ஓட்டங்களை கொடுத்து 6 விக்கெட்டுகளையும், ஜஸ்பிரித் பூம்ரா 2.3 ஓவர்களில் 14 ஓட்டங்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை யுவேந்திர சாஹல் தட்டிச் சென்றார்.