மகளிர் உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை இரண்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியதன்மூலம் இறுதி ஆட்டத்துக்கு முதல் அணியாக முன்னேறியது இங்கிலாந்து.

மகளிர் உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டம் தென் ஆப்பிரிக்கா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்றது.

இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணியில் மிக்னான் டு பிரீஸ் அதிகபட்சமாக 76 ஓட்டங்கள் எடுத்தார். அவருக்கு அடுத்தபடியாக, தொடக்க வீராங்கனை லெளரா வோல்வார்டட் 66 ஓட்டங்கள் அடித்தார்.

கேப்டன் டேன் வான் 27 ஓட்டங்கள், திரிஷா செட்டி 15 ஓட்டங்கள் எடுக்க, லிஸல் லீ, மாரிஸானே காப், கிளோ ட்ரையான் ஆகியோர் ஒற்றை இலக்கத்தில் வீழ்ந்தனர்.

மிக்னான் 76 ஓட்டங்கள், சுனே லஸ் 21 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இங்கிலாந்து தரப்பில் அனியா, நடாலி, ஜென்னி, ஹீத்தர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து ஆடிய இங்கிலாந்து அணியில் சாரா டெய்லர் அதிகபட்சமாக 54 ஓட்டங்கள் எடுத்தார். ஹீத்தர் நைட், ஃபிரான் வில்சன் தலா 30 ஓட்டங்கள் அடித்தனர். தொடக்க வீராங்கனை லாரன் 20 ஓட்டங்கள், உடன் வந்த டேமி பியூமெளன்ட் 15 ஓட்டங்கள், கேத்தரின் 12 ஓட்டங்கள், லெளரா மார்ஷ் 1 ஓட்டம் எடுத்தனர்.

போட்டியின் இறுதியில் ஜென்னி - அனியா இணை அணியை வெற்றிக்கு வழி நடத்தியது. இதில் ஜென்னி 27 ஓட்டங்கள், அனியா 4 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

தென் ஆப்பிரிக்கத் தரப்பில் அயபோங்கா, சுனே தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஷப்னின், மாரிஸானே, டேனியல்ஸ் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

அதன்படி தென் ஆப்பிரிக்கா 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிர்கு 218 ஓட்டங்கள் எடுத்தது. ஆனால், இங்கிலாந்து அதிரடியாக ஆடி 49.4 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 221 ஓட்டங்கள் எடுத்து வென்றது.

அந்த அணியின் சாரா டெய்லர் ஆட்ட நாயகியாக அறிவிக்கப்பட்டார்.