இந்தியா "ஏ' - ஆஸ்திரேலியா இடையிலான பயிற்சி கிரிக்கெட் போட்டி சமனில் முடிந்தது.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் வரும் 23-ஆம் தேதி புணேவில் தொடங்குகிறது.

அதனை முன்னிட்டு ஆஸ்திரேலியா - இந்திய "ஏ' அணிகள் இடையிலான மூன்று நாள் பயிற்சி கிரிக்கெட் போட்டி மும்பையில் நடைபெற்றது.

இதில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 127 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 469 ஒட்டங்கள் குவித்தது.

அந்த அணியில் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் 107, ஷான் மார்ஷ் 104, மிட்செல் மார்ஷ் 75, மேத்யூ வேட் 64 ஒட்டங்கள் குவித்தனர்.

இந்திய "ஏ' அணி தரப்பில் நிதின் சைனி 2 விக்கெட்டுகளையும், ஹார்திக் பாண்டியா, சபேஸ் நதீம், ஹெர்வாத்கர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய இந்திய "ஏ' அணி 2-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் 51 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 176 ஒட்டங்கள் எடுத்திருந்தது.

ஷ்ரேயஸ் ஐயர் 85, ரிஷப் பந்த் 3 ஒட்டங்களுடன் களத்தில் இருந்தனர்.

மூன்றாவது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய இந்திய "ஏ' அணியில் ஷ்ரேயஸ் ஐயர் சதமடிக்க, ரிஷப் பந்த் 21 ஒட்டங்களிலும், பின்னர் வந்த இஷன் கிஷான் 4 ஒட்டங்களிலும் அவுட்டானர்.

இதனையடுத்து ஷ்ரேயஸ் ஐயருடன் இணைந்தார் கிருஷ்ணப்பா கெளதம். அதிரடியாக ஆடிய இந்த ஜோடி 7-ஆவது விக்கெட்டுக்கு 138 ஒட்டங்கள் குவித்தது.

கெளதம் 68 பந்துகளில் 4 சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் 74 ஒட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

இதன்பிறகு சபேஸ் நதீம் ரன் ஏதுமின்றியும், அசோக் திண்டா 2 ஒட்டங்களிலும் நடையைக் கட்ட, கடைசி விக்கெட்டாக நிதின் சைனி களம்புகுந்தார். இதன்பிறகு வேகமாக ஒட்டங்கள் சேர்த்த ஷ்ரேயஸ் இரட்டைச் சதமடித்தார்.

நிதின் சைனி 4 ஒட்டங்களில் வெளியேற, இந்தியாவின் இன்னிங்ஸ் 91.5 ஓவர்களில் 403 ஒட்டங்களோடு முடிவுக்கு வந்தது.

ஷ்ரேயஸ் ஐயர் 210 பந்துகளில் 202 ஒட்டங்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஆஸ்திரேலியத் தரப்பில் நாதன் லயன் 4 விக்கெட்டுகளையும், ஓ"கீப் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

முதல் இன்னிங்ஸில் 66 ஒட்டங்கள் முன்னிலை பெற்ற நிலையல் 2-ஆவது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி ஆட்டநேர முடிவில் 36 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 110 ஒட்டங்கள் எடுத்தது.

அந்த அணியில் அதிகபட்சமாக டேவிட் வார்னர் 35, பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப் 37 ஒட்டங்கள் எடுத்தனர்.

இந்தியத் தரப்பில் ஹார்திக் பாண்டியா, நிதின் சைனி, அசோக் திண்டா, ரிஷப் பந்த் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இதனையடுத்து இரண்டு அணிகளும் மோதிய இந்த போட்டி சமனில் முடிந்தது.