இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடரில் கோவா எப்.சி. - மும்பை சிட்டி அணிகள் இடையிலான ஆட்டம் கோலின்றி டிராவில் முடிந்தது.

கோவாவின் ஃபட்ரோடா நகரில் புதன்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் மும்பை அணியில் டீகோ போர்லான், சுநீல் சேத்ரி போன்ற நட்சத்திர வீரர்கள் விளையாடியபோதும் அந்த அணி கோலடிக்க முடியாமல் திணறியது. 14 மற்றும் 22-ஆவது நிமிடங்களில் கோவா அணிக்கு கோலடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அதை ரோமியா பெர்னாண்டஸ் வீணடித்தார்.

இதன்பிறகு 27-ஆவது நிமிடத்தில் பெனால்டி பாக்ஸ் அருகே நின்ற டீகோ போர்லானுக்கு அழகான கோல் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார் சுநீல் சேத்ரி. ஆனால் போர்லான் கோலடிப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் சுதாரித்துக் கொண்ட கோவா கோல் கீப்பர் கட்டிமணி, போர்லானின் கோல் முயற்சியை முறியடித்தார். இதனால் முதல் பாதி ஆட்டம் கோலின்றி முடிந்தது.

பின்னர் நடைபெற்ற 2-ஆவது பாதி ஆட்டத்தின் 65-ஆவது நிமிடத்தில் மும்பையின் கிறிஸ்டியான், போர்லானுக்கு மிக அழகான கோல் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார். ஆனால் அந்த வாய்ப்பையும் போர்லான் வீணடிக்க, மும்பை அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதன்பிறகு மும்பை அணி கடுமையாகப் போராடியபோதும் அதற்கு பலன் கிடைக்கவில்லை. இதனால் கோலின்றி டிராவில் முடிந்தது ஆட்டம்.

இதுவரை 11 ஆட்டங்களில் விளையாடியுள்ள மும்பை அணி 4 வெற்றிகளுடன் 16 புள்ளிகளைப் பெற்று புள்ளிகள் பட்டியலில் 2-ஆவது இடத்தில் உள்ளது. கோவா அணி 11 புள்ளிகளுடன் 7-ஆவது இடத்தில் உள்ளது.